'அவர்கள் ஜனங்களிடத்தில் வந்த போது, ஒரு
மனுஷன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக
முழங்கால்படியிட்டு: ஆண்டவரே, என் மகனுக்கு இரங்கும்,
அவன் சந்திரரோகியாய்க் கொடிய வேதனைப்படுகிறான்; அடிக்கடி
தீயிலும், அடிக்கடி ஜலத்திலும் விழுகிறான்'. - (மத்தேயு 17:14-15).
இயேசு கிறிஸ்துவும் அவருடன் பேதுரு, யாக்கோபு,
யோவான் ஆகிய மூன்று சீஷர்களும்
மறுரூப மலையிலிருந்து அப்போதுதான் இறங்கி வந்திருந்தார்கள். அந்த
அனுபவம் இன்னும் அவர்கள் இருதயத்திலிருந்து
அகலாதிருந்தது. மோசேயும், எலியாவும் அங்கு இயேசுவுடன் பேசி
கொண்டிருந்ததை நேரில் அந்த சீஷர்கள்
கண்டிருந்தனர். இயேசுவின் முகம் சூரியனை போல
பிரகாசித்திருப்பதை நேரில் கண்டிருந்தனர். 'ஆஹா!
என்ன ஒரு உன்னத அனுபவம்
அது! அதிலேயே அப்படியே இருந்து
விட்டால் எத்தனை நலமாயிருக்கும்' என்று
யோசித்தபடியே, அவர்கள் அந்த நினைப்புடனே
கீழே இறங்கி வந்து கொண்டிருந்தனர்.











