நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். - (சங்கீதம் 23:4).
.
ஒரு போதகர் தன் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரையும், வீட்டில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் பறிகொடுத்தவராய், மிகுந்த வியாகுலத்தோடு ஒரு நாள் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அங்கு ஒரு ஆலயத்தை கட்டும்படி வேலையாட்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்கள் செய்யும் வேலையை சற்று நேரம் நின்று அந்த போதகர் பார்த்து கொண்டிருந்தார். அதில் ஒருவர், உளியையும், சுத்தியலையும் வைத்து, முக்கோண வடிவில் கல்லை செதுக்கி கொண்டிருந்தார். அதை பார்த்த போதகர், அவரிடம் சென்று, 'நீர் என்ன செய்து கொண்டிருக்கிறீர்' என்று கேட்டார். அந்த ஆலயத்தின் முகப்பு பகுதியை அவர் போதகரிடம் காட்டி, 'இந்த வடிவம், இந்த இடத்தில் பொருத்தும்படிக்கு இதை நான் செதுக்கி கொண்டிருக்கிறேன்' என்று கூறினார்.
அவர் அப்படி சொல்லி கொண்டிருக்கும்போதுதானே, ஆவியானவர் அவருடன் பேச ஆரம்பித்தார். போதகர் சென்று கொண்டிருக்கும் பள்ளத்தாக்கின் அனுபவம் அவரை தேவனிடம் நெருங்கி சேரும்படியாகவும், தேவனோடு அவருடைய சித்தத்தில் தன்னை சரியாக இடத்தில் பொருத்தும்படிக்கு தேவன் அனுமதித்திருக்கிறார் என்று அந்த நாளில் அறிந்து கொண்டார்.
ஒரு வேளை அந்த போதகரை போல நம்மில் அநேகர் மரண பள்ளத்தாக்கின் அனுபவத்திற்குள் கடந்து சென்று கொண்டிருக்கலாம். வாழ்விலே ஏற்படுகிற பாடுகள், துன்பங்கள், துக்கங்கள், ஏமாற்றங்கள் இவை யாவையும் ஒருவேளை அனுபவித்து, என்று எனக்கு விடுதலை கிடைக்கும் என ஏங்கி கொண்டிருக்கலாம். இந்த நாளில் நாம் ஒன்றை அறிந்து கொள்வோம். தேவன் அனுமதிக்கிற பள்ளத்தாக்கின் வாழ்வில் தேவன் சொல்லி கொடுக்கும் பாடத்தை கற்று கொண்டு, அவற்றை நமக்கு நன்மையாக பிரயோஜனப்படுத்தி கொள்வோம்.
நான் பல வருடங்களுக்கு முன், வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது, நாங்கள் இருந்த நாட்டை வேறு நாட்டவர் வந்து ஆக்ரமித்து கொண்டனர். கையில் மூன்று மாத குழந்தை, நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலைமை! கையிலும், பேங்கிலும் பணம் இல்லாத நிலைமை, குழந்தைக்கு பால் வாங்கி கொடுக்கக்கூட தேவையான பணம் இல்லாத குறை! உறவினர் யாரும் கண்டு கொள்ளவில்லை. தங்க வீடு இல்லை, மிகவும் பயங்கரமான பள்ளத்தாக்கின் வாழ்வை கடந்து சென்றோம். என்று விடுதலை கிடைக்கும் என்று கதறின நாட்கள் உண்டு. பணம் இருக்கும் வரைதான் உறவினரும், நண்பர்களும்! இல்லாவிட்டால் ஏன் என்று கேட்க யாருமிருக்க மாட்டார்கள். இபப்டி எல்லாரும் கைவிட்டிருந்தாலும் என் தேவன் எங்கள் குடும்பத்தை கைவிடவில்லை. திரும்பவுமாக, அந்த தேசத்தை திருப்பி கொண்டு வந்தார். எங்களை திரும்பவும் அந்த தேசத்தில் கொண்டு சேர்த்து, முன்னிருந்ததை பார்க்கிலும், பல மடங்கு ஆசீர்வதித்து, எங்களை வாலாக்காமல் தலையாக்கினார்! அல்லேலூயா!
நீங்களும் இதுபோன்ற கொடிய பள்ளத்தாக்கில் கடந்து சென்று கொண்டிருக்கிறீர்களோ, கலங்காதிருங்கள். நீங்கள் தேவனுடைய பிள்ளையாயிருந்தால், நிச்சயமாக அவர் அந்த அனுபவத்தை அனுமதித்ததற்கு காரணங்கள் உண்டு. அந்த அனுபவத்தை நாம் நமக்கு நன்மையாக மாற்றி கொள்ள வேண்டும்.
தாவீது இராஜாவின் சொந்த மகனே, அவரை நாட்டை விட்டு, வெளியேற்றின கொடுமை! அவருக்கு யாரும் உதவி இல்லை! மனம் கசந்தவராக இரவோடு இரவாக நாட்டை விட்டு வெளியேறினார். அவருக்கு கீழாக வேலை செய்த சீமேயி அவரை தூஷித்தான் (2 சாமுவேல் 16:7). ஒரு நம்பிக்கையில்லாத நிலை, நாளை என்ன நடக்கும் என்று அறியாத, புரியாதபடி இருந்த அவர் தேவனை மாத்திரம் சார்ந்து கொண்டார்.
நமக்கு ஏற்பட்டிருக்கும் இந்த கொடிய பள்ளத்தாக்கின் அனுபவம், ஒருவேளை நம்முடைய பாவத்தின் பலனாக இருக்கலாம், ஆனால் எல்லா அனுபவங்களும் பாவத்தினாலே தேவன் அனுமதிப்பது என்று நாம் எடுத்து கொள்ளக்கூடாது. அது தவறாகும். நாம் தேவனை அதிகமாய் பற்றி கொள்ளும்படியாக, அவரையே சார்ந்து ஜீவிக்கும்படியாக, தேவன் ஒரு வேளை அனுமதித்திருக்கலாம். ஆனால் எதுவாயிருந்தாலும், நாம் அந்த அனுபவத்திற்குள் செல்லும்போது, தேவன் நமக்கு செய்த நன்மைகளையும், நம்மை இரட்சித்ததையும் நாம் நினைவு கூர்ந்து, அவரை பற்றி கொள்ள வேண்டும்.
வேதத்தில் நாம் காணும் அநேக கர்த்தரின் பிள்ளைகள் அந்த கண்ணீரின் அனுபவத்தில் தங்கள் இருதயமும், மனமும் சோர்ந்து போனாலும், அவற்றின் பின் தேவனுடைய மகிமையையும், ஆசீர்வாதத்தையும் அனுபவித்ததை காண்கிறோம். சாத்தராக்,மேஷாக், ஆபெத்நேகோ மூவரும் எரியும் சூளையின் மத்தியில் எறியப்பட்டாலும், கர்த்தர் நான்காவது ஆளாக அவர்களோடு உலாவினதை, அவருடைய பிரசன்னத்தை அனுபவித்தார்கள். தானியேல் சிங்க கெபியில் தூக்கி எறியப்பட்டபோது, அந்த பயங்கரமான பள்ளத்தாக்கிலும், தேவன் அவரை பாதுகாப்பவராக இருந்ததை அறிந்து கொண்டார். யோபு, தாவீது, யோசேப்பு, பவுல் இப்படி எத்தனையோ பேர் அந்த கண்ணீரின் பள்ளத்தாக்கின் அனுபவத்தில் அடிபட்டாலும், அவர்கள், பள்ளத்தாக்கில் தான் மரங்கள் இன்னும் உயரமாக வளரும் என்பதையும், அந்த கண்ணீரின் வேளைகளில் தான், தேவனுடைய கிருபை அதிகமாக தங்களில் கிரியை செய்வதையும், அவரோடு கூட இன்னும் நெருங்கி ஜீவிக்கும் அனுபவத்தை அவர்கள் பெற்று கொண்டதையும், அந்த அனுபவங்கள் கர்த்தர் தங்களோடு கூட இருக்கிறார் என்பதையும் கற்று கொள்ள வழிவகுத்தது.
.
கர்த்தர் தாமே, நாம் அவருடைய பிள்ளைகளாய் இருந்தால், இந்த பள்ளத்தாக்கின் அனுபவத்தை அனுமதிக்கிறார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இந்த அனுபவம் ஒரு சாபம் என்று நாம் நினைத்தால், அவருடைய கரத்திலிருந்து ஆசீர்வாதத்தை இழந்து போய்விடுவோம். பள்ளத்தாக்கின் அனுபவத்தையே நாம் பெரிது படுத்தி கொண்டிருப்போமானால், பள்ளத்தாக்கிற்கு பின் ஒரு மேடு உண்டு, தேவனுடைய ஆசீர்வாதம் உண்டு என்பதை அறியாமற் போய் விடுவோம். உலகத்தார் துக்கிப்பதை போன்று நாம் துக்கித்து கொண்டு நடந்தால், தேவனுடைய இனிய பிரசன்னத்தை இழந்து போய்விடுவோம்.
நாம் பள்ளத்தாக்கின் அனுபவத்தில் கடந்து செல்லும்போது, தேவனுடைய கரத்தை பற்றி கொள்வோம். 'நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினி ஜுவாலை உன்பேரில் பற்றாது' - (ஏசாயா 43,2) என்று வாக்குதத்தம் செய்தவர் நிச்சயமாய் நம்மை தப்புவிப்பார். 'நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்' என்று நாம் அந்த அனுபவத்திலும், அதற்கு பின்னும் தைரியமாய் கூற முடியும். ஆமென் அல்லேலூயா!
No comments:
Post a Comment