அமெரிக்காவில்
உள்நாட்டுப் போர் (Civil war) நடந்து கொண்டிருந்த காலம். 1863-ம் ஆண்டு ஒரு நாள் காலை
வேளை. விர்ஜினியாவிலுள்ள நார்போர்க் துறை முகத்திற்குள் பயணிகள் கப்பல் ஒன்று வந்து
சேர்ந்தது. உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட அமெரிக்காவின் வடபகுதி இராணுவத்தினருக் கும்
தென் பகுதி இராணுவத்தினருக்கும் காயமுற்ற அல்லது நோயுற்ற கைதிகளாக அவரவர்களிடமிருக்கும்
இராணுவ வீரர்களை பரிமாற்றம் செய்துகொள்வது என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் தெற்கு
இராணுவத்தினர் அனுப்பிவைத்த நோயுற்ற இராணுவ வீரர்கள் தான் அந்தக் கப்பலில் வந்திருந்தனர்.
அவர்களுள் அநேக இராணுவ வீரர்கள் காயமுற்று காயங்களுக்கு சரிவர சிகிச்சையளிக்கப்படாத
நிலையில் சீழ்பிடித்து மிகவும் மோசமான நிலவரத்திலிருந்தனர். மருந்துகள் விநியோகிக்கப் படாமலும்
சரிவரக் கவனிக்கப்படாத நிலையில் அவர்கள் மெலிந்த அடையாளம் கண்டுகொள்ள முடியாத அளவு
எலும்பும் தோலுமாகக் காணப்பட்டனர். அவர்களுள் மத்தியு சுமார் 18 வயது நிரம்பிய நல்ல
வாலிபன். அவன் மிகவும் பெலவீனமாக இருந்தான். ஜெயில் மருத்துவ மனையில் கவனிப்பாரற்ற
நிலையில் உணவுமின்றி, மருந்தமின்றி, புண்கள் சரிவரக் கட்டப்படாமலும், சில புண்களில்
கட்டப்பட்ட துணியும் அழுக்கடைந்து இரத்தமும் சீழுமாக பார்ப்பதற்கே அருவருப்பான நிலையில்
காணப்பட்டான். அவனது உடம்பெல்லாம் புண்களாக இருந்தன. வேதனையால் பரிதாபமாக நெளிந்து
கொண்டிருந்தான்.
மத்தியுவுக்கு
அவனது அண்ணன் வில்லியத்திற்குத் தகவல் சொல்லப்பபட்டிருப்பதாகவும், அவன் நார்போர்க்
துறைமுகத்திற்கு அழைத்துச் செல்வான் என்று சொல்லப்படடிருந்தது. அதை அறிந்ததும் அந்த
நிலையில் அவனது அண்ணன் வில்லியம் தன்னை எப்படி ஏற்றுக் கொள்வான் என்றும் தன்னை அவனுக்கு
அடையாளம் கண்டுகொள்ள முடியுமா என்றெல்லாம் சிந்தனை ஓடியது.
அருகிலிருந்த
தன் நண்பர்களை மிகுந்த துக்கத்தோடு பார்த்தான். “மத்தியு நீ என்ன சொல்ல விரும்புகிறாய்?”
என்று பரிதாபத்தோடு அருகில் இருந்த நண்பன் கேட்டான். “இந்நிலையில் வில்லியம் என்னை
அடையாளம் கண்டுகொள்ள முடியாத. ஒருவேளை கண்டு கொண்டாலும் கூட என்னை அவனது வீட்டிற்கு
அழைத்துச் செல்வானா? அவனுடைய அழகான வீட்டில் வைத்துப் பராமரிக்க விரும்புவானா? நான்
எங்காவது ஒரு மருத்துவமனையில் சேர்ந்துகொள்ள முயற்சிப்பதுதான் நல்லது? என்று சொல்லி
தனது கந்தலான உடையையும் சீழ்வடியும் புண்களையும் பார்த்துக் கதறியழுதான். நண்பர்கள்
ஆறுதலளித்தாலும் அவனது துக்கத்தை அவனால் அடக்கிக் கொள்ளவே முடியவில்லை.
கப்பல் கட்டுத்தளத்தில்
(Wharf) வந்து நின்றது. கப்பலுக்குள் அநேகர் பிரவேசித்தனர். அவர்களுள் நேர்த்தியாக
உடையணிந்த பெலசாலியான மனிதன் ஒருவனும் நுழைந்தான். அவன் தான் வில்லியம். மத்தியூவின்
அண்ணன். நோயுற்ற இராணுவ வீரர்கள் வரிசையாகப் படுக்கவைக்கப்பட்டிருந்தனர். வில்லியம்
ஒவ்வொருவராகப் பார்த்துக் கொண்டே சென்றான். தன்னுடைய தம்பி மத்தியூவைக் காணவில்லையே.
மத்தியூ நினைத்தது சரியாகிவிட்டது “வில்லியம் என்னை அடையாளம் கண்டுகொள்ள வில்லையே”
துக்கம் தொண்டையை அடைத்தது. என்னைப் போன்ற நிலவரத்திலிருப்போரைக் காண்பது மகிழ்ச்சியான
காரியம் அல்லவே. மத்தியூவின் இருதயமே நின்று விடும்போலிருந்தது. “வில்லியம் எவ்வளவு
நேர்த்தியாக உடுத்தியிருக்கிறான். பார்ப்பதற்கு எவ்வளவு கெம்பீரமாக இருக்கிறான். நான்
நினைத்தபடியே ஆயிற்று. அவன் என்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லமாட்டான்” என்று சிந்தித்துக்
குழம்பிக் கொண்டிருந்தான் மத்தியூ.
வில்லியம் இரண்டாவது
முறையாக ஒவ்வொருவராக மிகவும் உண்ணிப்பாகப் பார்த்துக் கொண்டே வந்தான். இந்த முறையும்
மத்தியூவை பார்த்து அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் கடந்து போய்விட்டான். மத்தியூ பிரயாணத்தின்
போது ஒருவேளை இறந்து போயிருப்பானோ, வில்லியம் மனம் குழம்பினான். மத்தியூவின் சிந்தனையில்
வில்லியம் தன்னை வீடடிற்கு அழைத்தச் செல்லமாட்டான் என்ற எண்ணத்திலேயே இருந்தபடியால்
அவன் பேச மனதற்ற நிலையில் தக்கபாரத்தில் உழன்று கொண்டிருந்தான்.
வில்லியம் மூன்றாவது
முறை மிகவும் தீர்மானத்தோடு ஒவ்வொருவராக பொறுமையோடு நின்று உற்றுநோக்கி முகத்தைப் பார்த்துக்
கொண்டே வந்தான். இப்பொழுது மத்தியூ அருகில் வந்து உற்றுப்பார்த்தான். ஆனாலும் அவனால்
அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. வில்லியம் அவனைத் தாண்டிச் செல்ல முற்பட்ட போது மெல்லிய
அழுகுரலில் சத்தம் அவனைத் தடுத்து நிறுத்தியது.
“வில்லியம் என்னைத்
தெரியவில்லையா” வில்லியம் மிகுந்த
ஆர்வத்தோடு அவனை உற்று நோக்கினான். இப்பொழுது மத்தியூவைக் கண்டு கொண்டான். “தம்பி,
என் அன்புத் தம்பி ஏன் நீ என்னிடத்தில் இரண்டுமுறை நான் பார்த்தபோதும் ஒன்றுமே சொல்லவில்லையே
ஏன்? என்று துக்கத்தோடு கேட்டான். தம்பியின் பதிலுக்கு வில்லியம் காத்திருக்கவில்லை.
வில்லியம் தன்னுடைய உடையைப் பற்றியும் கவலைப்படவில்லை. மத்தியூவின் சீழ்படிந்த புண்கள்
நிறைந்த நிலவரத்தையும் அவனது கந்தலான உடையைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவனது இருகரங்களாலும்
அவனைத் தூக்கினான். தன்னுடைய மார்போடு அணைத்துக் கொண்டு கப்பலை விட்டு வெளியே வந்தான்.
தன்னுடைய கார் நிறுத்தியிருந்த இடம் வரை அவனை சுமந்து சென்று காரில் படுக்கவைத்தான்.
தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அழகான வீடு. மத்தியூ கற்பனை செய்து கூட பார்க்க
முடியவில்லை. சிகிச்சையளிக்க டொக்டரையும், அவனைப் பராமரிக்க நேர்சையும் வீட்டிலேயே
ஏற்பாடு செய்தான். அதற்கான பணச்செலவைக் குறித்து அவன் கவலைப்படவில்லை. விரைவிலேயே மத்தியூ
நல்ல ஆரோக்கிய நிலைக்குத் திரும்பினான். பெரிய மகிழ்ச்சி.
அன்பானவர்களே,
இயேசு கிறிஸ்து நம்மீது கொண்ட மகா பெரிய அன்பின் காரணமாக பாவத்தின் விளைவாகச் நம்மில்
ஏற்பட்ட அருவருப்பை அவர் கண்டுகொள்ளவில்லை. அழுக்கான கந்தலுடன் பாவத்தின் விளைவாக
செத்துக் கொண்டிருந்த நம்மை தள்ளாமல் அவரது கரங்களிலே நம்மைத் தூக்கி நம்மைச் சுகப்படுத்தினார்.
வில்லியம் எவ்வாற தன்னுடைய நோயுற்ற தம்பியை பராமரிப்பதில் மகிழ்ச்சியடைந்தானோ அதேபோல
தகுதியற்ற நம்மை நேசித்து தேடிவந்து தம்முடைய இரத்தத்தால் நம்மைக் கழுவி சுத்தமாக்கி
தம்முடைய பிள்ளையாக ஏற்றுக் கொண்டாரே. அந்த அன்பு எவ்வளவு பெரியது. “இழந்து போனதைத்
தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் (இயேசுகிறஸ்து) வந்திருக்கிறார்.” (லூக்
19:10) என்பது எவ்வளவு பெரிய உண்மை. நம்முடைய பாவத்தின் தன்மை எவ்வளவு கொடூரமானது என்பது
அவருக்குப் பொருட்டல்ல. அவா மன்னிக்கிறவர். இரட்சிக்கிறவர்.
“(மரியாள்) அவள் ஒரு குமாரனைப் பெறவாள், அவருக்கு இயேசு என்று
பேரிடுவாயாக, ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி (மன்னித்துத் தன்மேல் ஏற்றுக் கொண்டு) அவர்களை இரட்சிப்பார்
என்றான்” (மத் 1:21)
No comments:
Post a Comment