Pages

Monday, 4 March 2013

Return to Bethel பெத்தேலுக்குத் திரும்பு

ஆதியாகமம் 351-5 

கர்த்தருக்குப் பிரியமானவர்களே! உங்களை இயேசு பிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துகிறேன். இன்று நான் உங்களோடு, பெத்தேலுக்குத் திரும்புங்கள் எனும் தலைப்பில் பேசப் போகின்றேன். இச்செய்தி நிட்சயமாக உங்களுடைய வாழ்க்கையில் பெரிதானதோர் மாற்றத்தைக் கொண்டு வரும் என விசுவாசிக்கிறேன். 

பெத்தேல் என்று நான் இங்கு குப்பிட விரும்புவது, தேவன் என்னை சந்தித்த இடம், நான் இரட்சிக்கப்பட்ட அந்த நாள், நான் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொண்ட அந்த நாள், நான் தேவனை முகமுகமாய்த் தரிசித்த அந்த அனுபவத்தை ஆகும். அந்த பெத்தேலுக்குத் பெத்தேலுக்குத் திரும்பி வா. 


இச் செய்திக்கு ஆதாரமாக ஆதி 35:1-5. ”தேவன் யாக்கோபை நோக்கி நீ எழுந்து பெத்தேலுக்குப் போய் அங்கே குடியிருந்து நீ உன் சகோதரனாகிய ஏசாவின் முகத்திற்கு விலகி ஓடிப்போகிற போது உனக்கு தரிசனமான தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்கு என்றார். அப்பொழுது யாக்கோபு தன் வீட்டாரையும் தன்னோடு கூட மற்ற அனைவரையும் நோக்கி உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தேவர்களை விலக்கிப் போட்டு உங்களை சுத்தம் பண்ணிக் கொண்டு உங்கள் வஸ்திரங்களை மாற்றுங்கள். நாம் எழுந்து பெத்தேலுக்குப் போவோம் வாருங்கள், எனக்கு ஆபத்து நேரிட்ட நாளில் என் விண்ணப்பத்திற்கு உத்தரவு அருளிச் செய்து, நான் நடந்த வழியிலே என்னோடே கூட இருந்த தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்குவேன் என்றான். அப்பொழுது அவர்கள் தங்கள் கையில் இருந்த எல்லா அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதணிகளையும் யாக்கோபினிடத்தில் கொடுத்தார்கள். யாக்கோபு அவைகளை சீகேம் ஊர் அருகே இருந்த ஒரு கர்வாலி மரத்தின் கீழே புதைத்துப் போட்டான். பின்பு பிரயாணம் புறப்பட்டார்கள். அவர்களைச் சுற்றிலும் இருந்த பட்டணத்தாருக்குத் தேவனாலே பயங்கரம் உண்டானதினால், அவர்கள் யாக்கோபின் குமாரரை பின் தொடராதிருந்தார்கள்.” 

அருமையான தேவ பிள்ளையே! நீ ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட அந்த நாள் உனக்கு ஞாபகம் இருக்கிறதா? தேவன் உன்னைத் தேடி வந்து உன்னை சந்தித்து அணைத்துக் கொண்டு, உன்னைத் தம்முடைய பிள்ளையாய் சேர்த்துக் கொண்ட அந்த நாள் உனக்கு ஞாபகம் இருக்கிறதா? பாவத்திலே நீ மூல்கியிருந்த பொழுது அந்த பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து உனக்கு விடுதலை பெற தெரியாதபடி நீ சிக்கித்தவித்த போது, எவராலுமே உனக்கு விடுதலை கொடுக்க முடியால் இருந்த அந்த நேரத்திலே, தேவனே உன்னைத் தேடி வந்து, உன்னைத் தொட்டு விடுதலை கொடுத்து, உன்னுடைய வாழ்க்கையிலே இருந்த அக்கிரமக் கட்டுகளை முறித்து, இருளை நீக்கி, உன்னை அவருடைய வெளிச்சத்தினால் நிறையப்பண்ணின அந்த நாளை, நீ மறந்து போகாமல் இன்றும் அதை ஞாபகமாய் வைத்திருக்கிறாயா? தேவன் உங்களை பரிசுத்த ஆவியால் நிரப்பி, அந்த முதலாவது தடவை நீங்கள் அந்நிய பாஷையிலே பேசின அந்த நாள் உங்களுக்கு ஞாபகமாயிருக்கிறதா? நீங்கள் இரட்சிக்கப்பட்ட அந்த நாட்களிலே, பரிசுத்தத்திற்கு உங்கள் வாழ்க்கையிலே எவ்வளவோ முக்கியத்துவத்தைக் கொடுத்தீர்கள், எவ்வளவோ நேரம் தேவனை நான் இன்னும் அறிய வேண்டும் என்று சொல்லி அவருடைய பாதத்திலே அவரைத் தேடினீர்கள், தேவனை அறிய வேண்டும், வேதத்திலே இருக்கிற சத்தியத்தை நான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வேதத்தின் மேலே பாசம் வைத்து வேதத்தையே வாசித்துக் கொண்டு இருந்தீர்கள். நாங்கள் ஆராதனை 9 மணிக்கு என்று சொன்னால், 7 மணிக்கெல்லாம் வந்து விடுவோம். துதியிலே, நமஸ்காத்திலே, ஆராதனையிலே முழுமையாய்ப் பங்குபற்றி அந்த ஆசிர்வாதத்திற்குள்ளே கடந்து செல்லுகிற ஒரு பெரிய சந்தோஷம், ஒரு மகிழ்ச்சி. கூட்டம் முடிந்தால் ஐயோ ஏன் முடிந்தது என்கிற ஒரு ஏக்கம். எவரையும் ஆராதனையிலே ஜெபிக்க சொல்லத் தேவையில்லை. எல்லாருக்குள்ளும் ஒரு வாஞ்சை இருந்தது. அது ஒரு புதிய சபையாக காணப்பட்டது. அங்கே இருந்தவர்கள் எல்லோரும், புதிதாய் கர்த்தராகிய இயேசுவை ஏற்றுக் கொண்டு, பரிசுத்த ஆவியிலே நிறைந்து, ஒவ்வொருவரும் கர்த்தரைத் தேடிக் கொண்டிருந்த நாட்கள் அது. ஆனால் இன்று அந்த ஆர்வம், அந்த வைராக்கியம், அந்த வாஞ்சை, அநேகருடைய வாழ்க்கையிலே இல்லை. இன்று எங்களில் அநேகர் பெத்தேலை விட்டு தூரம் போய் விட்டோம். தேவனுக்குப் பிரியமானவர்களே! இன்று எங்களில் எல்லோருமே பெத்தேலை விட்டு தூரம் போய் விட்டோம். 

யாக்கோபு, ஏசா என்ற இரட்டை பிள்ளைகள் ஈசாக்குக்குப் பிறந்தார்கள். அவர்கள் இருவரையும் ஆசிர்வதிக்கிற ஒருநாள் வந்தது. அப்பொழுது யாக்கோபு ஏசாவுக்கு, கூலைக் கொடுத்து அந்த சேஷ்ட புத்திர பாகத்தை அவன் தனக்கென்று எடுத்து, பின்பதாக தன்னுடைய சொந்த தகப்பன் குருடாய் இருந்ததினால், தன்னுடைய மூத்த சகோதரன் ஏசா போல தன்னை அலங்கரித்து, ஏசா சமைக்கிற வண்ணமாகவே அவன் தன்னுடைய தாயைக் கொண்டு உணவைச் சமைத்து மூத்தவனுக்குரிய ஆசிர்வாதத்தை அவன் சுதந்தரித்துக் கொண்டான். இதை அறிந்த மூத்த சகோதரன் கோபப்பட்டான், அவனைக் கொலை செய்ய எத்தனம் பண்ணினான். ஆகவே யாக்கோபினுடைய தாய் அவனுக்கு ஒரு கழுதையிலே சேனம் வைத்து, ஆகாரங்களையெல்லாம் ஆயத்தப்படுத்தி அவனை லாபானிடத்திலே போ என்று சொல்லி அனுப்பிவிட்டாள். சகோதரனை கொலை செய்தால் தன்னுடைய தகப்பன் வேதனையுற்று மரித்துப் போவார் என்று ஏசா எண்ணி, யாக்கோபைப் பின் தொடர்ந்து, அவன் யாக்கோபைப் பிடித்து, அந்தக் கழுதையை எடுத்து, அவனுடைய தாய் அவனுக்குக் கொடுத்த ஆகாரங்களையும், தண்ணீரையும் பறித்தெடுத்து, வெறும் கையனாகவும், ஒரு வெறும் கோலோடும் மாத்திரம் பிரயாணத்தைத் தொடரும்படி அவனை விட்டு விட்டான். அவ்வண்ணமாக அவனை விட்டுவிட்டால், அந்த வனாந்திரத்தில் அவன் மரித்துப் போய்விடுவான். வனாந்திரத்திலே மிருகங்கள் அவனைக் கடித்து தின்று விடும், தண்ணீரில்லாமல் அவன் மரித்துப் போய் விடுவான் என்று நினைத்தான். யாக்கோபு களைத்துப் போய்விட்டான். ஒருநாளுமே அவன் வீட்டை விட்டு வெளியே போனதில்லை. அவன் ஒரு வீட்டுப் பிள்ளையாய் இருந்து வளர்ந்தவன். இரவாகிவிட்டது. ஒரு இடத்திலே அவன் இளைப்பாறுகிறான். அங்கே அவன் ஒரு கல்லின் மேல் தன் தலையை வைத்து, அந்த வனாந்திரத்திலே, காட்டிலே தனிமையாக உறங்குகிறான். அந்த இராத்திரி, தேவன் அவனுக்கு ஒரு சொப்பனத்தைக் காண்பிக்கிறார். அந்த சொப்பனத்திலே, பரலோகத்திலே இருந்து அவன் இருக்கிற இடத்திற்கு ஒரு ஏணி காணப்பட்டது, அந்த ஏணியிலே தூதர்கள் ஏறுகிறதும், இறங்குகிறதுமாய் இருக்கிறதாகக் கண்டான். அவன் காலையிலே எழுந்ததும், இந்த இடத்திலே தேவன் இருக்கிறார் என்று சொல்லி, அந்த இடத்திற்கு பெத்தேல் என்று பேரிட்டு, அந்தக் கல்லை அவன் அபிஷேகம்பண்ணி தேவனோடு ஒரு பொருத்தனை பண்ணினான். 

ஆதி 28:20-22 வசனங்களில்” அப்பொழுது யாக்கோபு, தேவன் என்னோடே இருந்து, நான் போகிற இந்த வழியிலே என்னைக் காப்பாற்றி, உண்ண ஆகாரமும், உடுக்க வஸ்திரமும் எனக்குத் தந்து, என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திரும்பி வரப்பண்ணுவாரானால், கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார். நான் தூனாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும். தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனை பண்ணிக் கொண்டான்”. 

அதன் பின்பதாக யாக்கோபு தன் பிரயாணத்திலே லாபானை சந்திக்கிறான். லாபானுடைய இரண்டு குமாரத்திகளை விவாகம்பண்ணி, அங்கே சுகமாய் வாழ்ந்து வருகிறான். இருபது வருடங்களாகி விட்டது. பெத்தேல் என்கிற ஒரு இடத்திலே, சொப்பனத்தைக் கண்டு, தேவனைத் தரிசித்து, தேவனிடத்திலே ஒரு சவாலை விட்டு, நீர் இதை எனக்குச் செய்தால் நான் திரும்பி வந்து உமக்கொரு ஆலயத்தைக் கட்டுவேன், உம்மையே நான் சேவிப்பேன் என்று சொல்லி விட்டு போனவன், இருபது வருடங்களாகியும், அவன் சொன்ன பொருத்தனையை மறந்து வாழ்ந்து கொண்டிருந்தான். தேவன் தன்னை சந்தித்ததை மறந்து போகவில்லை. ஆனாலும் அவன் தேவனுக்குப் பண்ணின பொருத்தனையை நிறைவேற்ற அவன் முற்படவில்லை. 

நாம் உபத்திரவப்படும் பொழுது, பிரச்சனைகளுக்கூடாய்ப் செல்லும் பொழுது, இக்கட்டுகள் நேரிடும் பொழுது, பலவிதமான பொருத்தனைகளை தேவனோடு பண்ணிக்கொள்கிறோம். ஆனால் பிரச்சனைகள் தீர்ந்து போக, சூழ்நிலைகள் எல்லாம் சமாதானமாய் மாற, எங்களுடைய வாழ்க்கை ஆசிர்வாதத் திற்குள்ளாய்க் கடந்து செல்லும் பொழுது, நாம் பண்ணிக்கொண்ட பொருத்தனைகளை மறந்து போகிறோம். நீ அதை மறந்து போகலாம். ஆனால் தேவன் ஒருநாளும் அதை மறந்து போவதில்லை. அருமையான சகோதரனே, சகோதரியே எனக்குப் பிரியமானவனே கேள்! உன் இக்கட்டான நேரத்திலே, உன்னுடைய கண்ணீரின் சூழ்நிலையிலே, பயங்கரங்கள் உன்னை சூழ்ந்து கொண்ட பொழுது, மரணக் கட்டுகள் உன்மேல் பிரவாகித்து வந்த பொழுது, தப்பித்துக்கொள்ள வழி தெரியாமல் நீ தவிக்கும் பொழுது, நீ தேவனிடத்திலே பண்ணிக் கொண்ட பொருத்தனைகளை, நீ தேவனுடைய பாதத்திலே ஒப்புக்கொடுத்த அர்ப்பணிப்புக்களை, நீ மறந்து போகலாம். ஆனால் தேவன் ஒரு பொழுதும் அவற்றை மறந்து போவதில்லை. யாக்கோபு அதை மறந்து போனான். 20 வருடங்கள் மறந்து வாழ்ந்தான். 20 வருடங்களுக்குப் பின்பதாக தேவன் மீண்டும் அவனோடு கூட பேச ஆரம்பிக்கிறார். திரும்பவும் ஆதி 35:1ம் வசனத்திற்கு வாருங்கள். ”தேவன் யாக்கோபை நோக்கி, நீ எழுந்து பெத்தேலுக்குப் போய் அங்கே குடியிருந்து நீ உன் சகோதரன் ஏசாவின் முகத்திற்கு விலகி ஓடிப்போகிற போது உனக்குத் தரிசனமான தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்கு என்றார்”. 

யாக்கோபே! என் மகனே! நீ 20 வருடங்களுக்கு முன்பாக, நான் உன்னைச் சந்தித்ததை நீ மறந்தாயோ? 20 வருடங்களுக்கு முன்பாக நீ உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த நேரத்திலே, நீ தனிமையாய் இருந்த அநத நேரத்திலே, நான் உன்னைத் தேடி வந்ததை மறந்தாயோ? உன்னை இக்கட்டு சூழ்ந்து கொண்ட பொழுது நான் உன்னைத் தேடி வந்து உன்னைச் சூழ பாளயம் இறங்கி, உன்னைப் பாதுகாப்பாக உன் மாமாவினிடத்திலே கொண்டு வந்து சேர்த்ததில்லையோ? அதை நீ மறந்தாயோ? 20 வருடங்களுக்கு முன்பாக நீ என்னிடத்திலே, ஆண்டவரே நீர் தேவனானால் இந்தக் காரியங்களை எனக்கு செய்யும் அப்பொழுது நான் உன்னமப் பின்பற்றுவேன் என்று சொன்னாயே, நீ சொன்னதை நான் இதுவரைக்கும் செய்து முடிக்கவில்லையா? அதை நீ மறந்து போனாயோ? உனக்கு நான் ஆகாரம் தரவில்லையா? உன் வழிப் பிரயாணங்களிலே உன் சத்துருக்கள் உன்னை அழிக்காதபடி, உன்னை மேற்கொள்ளாதபடி, இதுவரைக்கும் உன்னைப் பாதுகாக்கவில்லையா? நீ என்னை மறந்தாயோ? 20 வருடங்களுக்கு முன்பதாக பொருத்தனை பண்ணினாயே. எழும்பு! நீ சொன்ன பொருத்தனையை போய் செய் என்று ஆண்டவர் யாக்கோபுக்குச் சொன்னார். தேவன் 20 வருடங்களுக்குப் பின்பதாக யாக்கோபோடு பேசினார். தேவன் பேசினவுடனே யாக்கோபு அந்த சத்தத்திற்குக் கீழ்படிந்தான். ஆம் ஆண்டவரே நீர் என்னை சந்தித்த நாளை நான் மறக்கவில்லை. நான் உம்மோடு பண்ணிக்கொண்ட பொருத்தனைகளை மறந்து போகவில்லை. தன் குடும்பத்தைப் பார்த்துச் சொல்லுகிறான். ஆயத்தப்படுங்கள். நாம் பெத்தேலுக்குப் போவோம் என்றான். இந்த இருபது வருடங்களுக்குள்ளே என்ன நடந்தது? யாக்கோபு தன் இஷ்டமானபடி வாழ்ந்து வந்தான். இந்த இருபது வருடங்களுக்கூடாக அவன் தேவனை மறந்து வாழ்ந்து வந்தான். இந்த இருபது வருடங்களுக்கூடாக அவன் தேவன் மேல் கொண்டிருந்த அந்த வைராக்கியத்தை அவன் இழந்து போயிருந்தான். 

இன்று எங்களில் அநேகருடைய வாழ்க்கை, எங்கள் இருதயம் அவ்வண்ணமாகவே காணப்படுகிறது அல்லவா? தேவன் எங்களை சந்தித்த அந்த நாளிலே, தேவன் எங்களை தம்முடைய வல்லமையால் அபிஷேகம்பண்ணின அந்த நாளிலே, தேவன் எங்களுக்கு தரிசனமான அந்த நாளிலே, நாம் எவ்வளவாய்க் கண்ணீரோடும், மன உருக்கத்தோடும், எங்கள் முழு உள்ளத்தோடும், எங்கள் முழு பெலத்தோடும், உண்மையாய் தேவ பாதத்திலே எங்களை அர்ப்பணித்தோம். ஆனால் இடைப்பட்ட காலத்திற்குள்ளே, பல காரியங்கள் எங்கள் வாழ்க்கையிலே கலந்து விட்டது. திருமணங்கள் பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்கள், தொழில் நம் வாழ்க்கையிலே குறுக்கிட்டு எங்களை நிலைகுலையச் செய்து விட்டது. நாம் தேவனோடு பண்ணிக்கொண்ட உடன்படிக்கையிலிருந்து எங்களை தூரப்படுத்திவிட்டது. 

படிப்பது நல்ல விஷயம் தான். நன்றாய்ப் படிக்க வேண்டும். ஆனால் கர்த்தருக்குக் கொடுக்க வேண்டிய நேரத்தை நீ கர்த்தருக்குக் கொடுக்க வேண்டும். ஆண்டவர் சொன்னார் ராயனுக்குக் கொடுக்க வேண்டியதை ராயனுக்கும் தேவனுக்கு கொடுக்க வேண்டியதை தேவனுக்கும் கொடுக்க வேண்டும். நீங்கள் நன்றாய் உழைக்க வேண்டும். நன்றாய்ச் சாப்பிட வேண்டும். குடும்பமாய் சந்தோஷமாய் இருக்க வேண்டும். அதே நேரத்திலே நீ தேவனைச் சேவிக்க வேண்டும். தேவனுக்குப் பண்ணிக் கொண்ட பொருத்தனையை நிறைவேற்ற வேண்டும். ஆண்டவர் உன் நினைவாய் இருக்கிறார். நன்றாக முன்னேறிக் கொண்டிருந்த உன் வாழ்க்கையிலே, திடீரென்று என்று ஒரு நெருக்கம், இனிமேலும் முன்னேற முடியாதபடிக்கு தடைகள்? ஏன் இது? தேவன் ஒரு கட்டுப்பாட்டை என் வாழ்க்கையைச் சூழ போட்டு விட்டார் போல் இருக்கிறதா? நில் நில், நீ தூரம் போய்விட்டாய். நீ என்னோடு பண்ணிக் கொண்ட அந்த உடன்படிக்கையை நீ மறந்து போயிருக்கலாம். ஆனால் நான் மறக்கவில்லை. பெத்தேலுக்குத் திரும்பு என் மகனே. பெத்தேலுக்கு திரும்பி போ என் மகளே என்று இன்று உன்னைப் பார்த்து அழைக்கிறார். பெத்தேலுக்குத் திரும்பி வா. 

பழைய ஏற்பாட்டில் நடந்த இந்தச் சம்பவத்தைப் போல், புதிய ஏற்பாட்டிலும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. வேதாகமத்தின் முதலாவது புத்தகமாகிய ஆதியாகமத்திலே நடந்த சம்பவத்தை நான் உங்களுக்கு முன் இதுவரை வைத்தேன். இப்போ, வேதாகமத்தின் கடைசிப் புத்தகமாகிய வெளிப்படுத்தலிலே இருந்து மற்றுமொறு சம்பவத்தை நாம் இப்பொழுது பார்ப்போம். வெளி 2:1-5ல், எபேசுவிலே காணப்பட்ட சபைக்கு ஆண்டவர் கூறுவது என்னவென்றால், ”நீ ஆதியில் கொண்டிருந்த அந்த அன்பை, தேவன் மேலே கொண்டிருந்த அன்பை, தேவனுடைய சபையின் மேலே கொண்டிருந்த அன்பை, தேவ ஜனத்தின் மேலே கொண்டிருந்த அன்பை, தேவனுடைய அபிஷேகத்தில் கொண்டிருந்த அன்பை, ஜெபத்திற்காக கொண்டிருந்த அன்பை விட்டாய். இன்று உன் பேரில் எனக்குக் குறையுண்டு. ஆகையால் நீ இன்ன நிலமையில் இருந்து விழுந்தாய் என்பதை நினைத்து மனந்திரும்பி ஆதியிலே செய்த கிரியைகளை செய்வாயாக. இல்லாவிட்டால் நீ மனந்திரும்பாத பட்சத்திலே உன் விளக்குத் தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்”. கர்த்தர் மேல் வைத்திருக்கிற அன்பு, பாசம், வைராக்கியம் எல்லாம் போய் விட்டது. வாலிபத் தம்பி, தங்கையே ஆதியிலே நீ கொண்டிருந்த அன்பை நீ இழந்தாய். எப்படி நாங்கள் திரும்பவும் பெத்தேலுக்குப் திரும்ப முடியும்? என்பதைக் குறித்து நான் பேசப்போகிறேன். ஆகையால் நீ இந்த நிலமையில் இருந்து விழுந்தாய் என்பதை நினைத்துக்கொள். பெத்தேலுக்கு நாம் எப்படி திரும்பி செல்ல முடியும். 

முதலாவது ஆதியிலே நீ செய்த கிரியைகளை உன்னுடைய ஆவிக்குரிய அனுபவங்களை, உன்னுடைய அர்ப்பணிப்புக்களை நினைத்துக்கொள். என்னனென்ன காரியங்களை கர்த்தருக்காக விட்டுவிட்டாயோ, கர்த்தருக்காக உதறித் தள்ளினாயோ அதை நினைத்துக்கொள். எவற்றையெல்லாம் ஒரு காலத்திலே தள்ளினோமோ, இன்றைக்கு அவையெல்லாவற்றையும் திரும்ப சேர்த்துக் கொண்டிருக்கிறோம் அல்லவா? 

சபையைப் பார்த்து, நீதியைப் பின்பற்றி கர்த்தரைத் தேடுகிற நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள். ஏன்? அப்படிச் சொல்லுகிறார்? நீ யார்? நீங்கள் வெட்டி எடுக்கப்பட்ட கன்மலையும், ஆண்டவர் உங்களைப் பார்த்து என்ன சொல்லுகிறார். பெரிய கன்மலை இருக்கிறது. அங்கே அவர் உன்னைக் கண்டார். அந்தக் கன்மலையிலே எவ்வளவோ கற்பாறைகள் இருக்கும் போழுதும் கூட, அவர் உன்னை மாத்திரம் குறிப்பாக கண்டு பிடித்து, உன்னைக் கவணமாக, பழுதடைந்து போகாதபடிக்கு உன்னை சுற்றி உடைத்து, உன்னைப் பிடித்திருந்த நுகங்களை முறித்து, வெளியே கொண்டு வந்து தம்முடைய இரத்தத்தை ஊற்றி உன்னை சுத்திகரித்து, உன்னைப் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தால் நிரப்பி, வரங்களால் அலங்கரித்து, அழகானதோர் கல்லாக அவர் உன்னை ஏற்படுத்தினார். உன்னை இந்த நிலமைக்குக் கொண்டுவர, அவர் எவ்வளவோ பிரயாசப்பட்டார். அதை நினைத்துக் கொள் என்று ஆண்டவர் சொல்லுகிறார். அவர் உனக்காகப் பிரயாசப்பட்டார். அவர் உனக்காக கல்வாரி சிலுவையிலே தன்னை கிழிக்கப்பட ஒப்புக் கொடுத்தார். எதற்காக? உன்னை ஓர் அழகான பாத்திரமாய் மாற்றுவதற்காக. தொடர்ந்தும் இந்த வசனம் சொல்லுகிறது நீங்கள் தோண்டி எடுக்கப்பட்ட துறவின் குழியை நோக்கிப் பார். எந்தத் துறவிலே இருந்து எந்தக் குழியிலே இருந்து ஆண்டவர் உன்னை இரட்சித்தார் என்பதை சிந்தித்துப்பார். என் மகனே! என் மகளே! மனிதக் கரங்களால் உன்னை மீட்க முடியாத ஒரு நிலையிலே நீ இருந்த போது, உன்னுடைய வாழ்க்கையிலே எல்லாம சிதைந்து போய், அழிந்து போய், நம்பிக்கையில்லாமல் இருந்த போது, என் தேவன், என் அப்பா இயேசு, உன்னை தேடி வந்து, அந்தக் கன்மலையிலே இருந்து, அந்தக் குழியிலே தம்முடைய கரத்தை நீட்டி, உன்னைத் தூக்கி எடுக்கவில்லையா? அதை நினைத்துப் பார். நீ இரட்சிக்கப்படும் போது எந்த நிலமையிலே இருந்தாய்? ஞாபகப்படுத்திப் பார் என்று ஆண்டவர் சொல்லுகிறார். நீ இரட்சிக்கப்படுகிற போது, சமூதாயத்திலே உன்னுடைய நிலமை எப்படி இருந்தது. ஞாபகப்படுத்திப் பார். சிலருக்குத் தங்களுடைய ஆரம்பத்தைச் சொல்ல விருப்பமில்லை. தாங்கள் கஷ்டப்பட்டதை மற்றவர்களுக்குச் சொல்ல விருப்பமில்லை. நீங்கள் கஷ்டப்படுகின்ற நேரம், நீங்கள் வேர்வை சிந்தின நேரம், பசியால் பட்டினியால் வாடுகின்ற நேரம், எவருமே உங்களோடு உறவு கொண்டிருக்கவில்லை. எல்லாரும் உங்களைத் தள்ளி வைத்தார்கள். ஆனால் கர்த்தர் உங்களைத் தள்ளி வைக்கவில்லை. கர்த்தர் உன்னைத் தேடி வந்தார். சிலரைப் சமூதாயம் பயித்தியம் என்று சொன்னது. அந்தப் பயித்தியத்தைத் தான் தேவன் தேடி வந்தார் அல்லவா? உலகம் உன்னைத் தள்ளினது. உறவினர்கள் உன்னைப் புறக்கணித்தார்கள். ஆனால் அவர் உன்னைப் புறக்கணிக்கவில்லை. அவர் உன்னைத் தேடி வந்தார். ஆமென்!!! அவர் உன்னை ஆசிர்வதித்து, இன்றைக்கு இந்த நிலமையிலே வைத்திருக்கிறார். உன் முன்னிலமையைப் பார்! எப்படி இருந்தாய்? இன்று கர்த்தர் உன்னை ஆசிர்வதித்திருக்கிறார். கர்த்தர் உன்னை அழகுபடுத்தயிருக்கிறார். கர்த்தர் உன்னை உயர்ந்த நிலையிலே உன்னைக் கொண்டு வந்து நிறுத்தியிருகிறார். அவர் உனக்கு ஞானம் கொடுத்தார். உனக்குத் தங்கியிருக்க உறைவிடம் கொடுத்தார். மறந்து போக வேண்டாம். 

எபே 2:12 நீ தேவன் இல்லாமல் வாழ்ந்தவன். நீ தெய்வம் இல்லாததை தெய்வம என்று நம்பக்கொண்டிருந்தாய். அதுதான் வேதம் சொல்கிறது தெய்வம் இல்லாதவனாயிருந்தாய், நரகத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தாய். அழிவின் பாதையிலே இருந்தாய். அப்பொழுது அவர் உன்னைத் தேடி வந்தார். அவர் உன்னைத் தேடி வந்தார். 

இரண்டாவது காரியம் மனந்திரும்பு. வெளி 2:5 2ம் பகுதி. மனந்திரும்புதல் என்றால் என்ன? தேவனை மறந்து எனது சொந்த வழிகளில் ஓடிக்கொன்டிருக்கிற நான், நான் போகின்ற வழி பிழையானது என்பதை உணர்ந்து, கர்த்தருடைய சத்தத்துக்கு கீழ்படிந்து, எதுவிதமான விவாதங்களை முன்வைக்காது, இதுவரை நடந்து வந்த திசையிலிருந்து, எதிர்திசையிலே நடப்பதாகும். 20 ஆண்டுகளுக்குப் பின் யாக்கோபை அவர் சந்திக்கிறார். பெத்தேலுக்குத் திரும்பு. நீ போகின்ற பாதை பிழையானது, நீ போகின்ற திசை பிழையானது, நீ எடுத்திருக்கிற முடிவுகள் பிழையானது, திரும்பு! பெத்தேலை நோக்கி வா. இவன் தேவனுடைய பிள்ளை தான். இரட்சிக்கப்பட்ட பிள்ளை தான்,. ஆவியிலே நிரம்பின பிள்ளைதான், வரங்களால் நிறைந்த பிள்ளை தான், ஆனாலும் ஒரு பிழையான ஓட்டத்திலே ஓடிக் கொண்டிருக்கிறாய். எப்படி பெத்தேலுக்கு் திரும்புவது. மனந்திரும்புதலினாலேயே. எப்படி மனந்திரும்ப வேண்டும்? மனந்திரும்புதல் என்றால் U Turn எடுப்பதேயாகும். அதுதான் பெத்தேலுக்கு உன்னை நடத்திச் சொல்லுகின்ற பாதை. அருமையான சகோதரனே! சகோதரியே! நீ பெத்தேலுக்குத் திரும்புகிற காலம் வந்து விட்டது. தேவன் உன்னை முதலாதவது தடவை அழைத்த இடத்திற்கு வருகிற அந்த நேரம் வந்து விட்டது. அந்த நாளிலே நீ தேவனுக்குக் கொடுத்ததான அந்த அர்ப்பணிப்பை ஞாபகப்படுத்தி அதை செய்ய அர்ப்பணிக்கும் நேரம் வந்து விட்டது. நீ இரட்சிக்கப்பட்ட நாளிலே உலகம் கொடுக்க முடியாத சந்தோஷத்தால் உன் உள்ளம் நிறைந்திருந்தது. இப்பொழுது அந்த சந்தோஷம் இல்லை. அதை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் பழைய நிலமைக்குத் திரும்பு. அன்று உன் இருதயம் எவ்வளவோ சமாதானத்தால் நிறைந்திருந்தது. அப்பொழுது அந்த சமாதானம் இல்லை. ஏனென்றால் நீ பெத்தேலை விட்டுப் போய் விட்டாய். பெத்தேலுக்குத் திரும்பு. சமாதானம் தனாக வரும். பெத்தேலில் இருக்கும் பொழுது, பரிசுத்தத்தை மேன்மையாய் எண்ணினோம். பரிசுத்த ஆவியானவரை எந்த வகையிலும் துக்கப்படுத்தாமல், எப்பொழுதும் ஆவியானவரை சந்தோஷப்படுத்துவதையே நாம் மேன்மையாய் கருதினோம். எங்கே போனாலும் ஆண்டவரைக் குறித்து சத்தியம் சொல்லுவோம். ஆனால் இன்றைக்கு நம்முடைய நிலமை எப்படி இருக்கிறது. இன்றைக்கு பொய் சொல்லுவது, ஒருவனுக்கு எதிராகப் பேசுவது, புறங்கூறுவது, சபை கூடுதலை அர்ப்பமாய் எண்ணி சபை கூடுதலுக்கு வராமல் இருப்பது, அந்நிய நுகத்தோடு சம்பந்தம் கலப்பது இவைகள் எல்லாம் ஒரு பாவமாய்த் தெரிவதில்லை. என்ன நடந்தது? நாம் பெத்தேலை விட்டு தூரம் போய் விட்டோம். எல்லாமே ஒரு பழக்கமாகி விட்டது. பாடல் பாடுவது, ஜெபிப்பது, துதிப்பது எல்லாம் ஒரு சாம்பிரதானமாகி விட்டது. தேவ பிரசன்னத்தை உணருகிறாயா? இன்று மனந்திரும்புதல் உண்டா? 

யாக் 4:8 தேவனிடத்தில் சேருங்கள்……… இருமனம் என்றால் ஒரு நாளைக்கு ஆண்டவரைப் பிடித்தல், ஒரு நாளைக்கு உலகத்தைப் பிடித்தல். ஒருநாளைக்கு ஒரு காரியம் சரியாகத் தெரியும் இன்னொரு நாளைக்கு அது பிழையாகத் தெரியும். ஒருநாள் பெத்தேலிலே ஒருநாள் உலகத்திலே. இருதயத்தை பரித்தம் பண்ணுங்கள் அதுதான் பெத்தேலுக்குத் திரும்புதல். 

மல் 3:7 “ஆண்டவர் சொல்கிறார் என்னிடத்திற்குத் திரும்புங்கள் என்று சொல்கிறார் அப்பொழுது நான் உங்களிடத்திற்குத் திரும்புவேன்”. அருமையான சகோதரனே சகோதரியே நீ கர்த்தரிடத்திலே மனந்திரும்பாவிட்டால் அவர் ஒருபோதும் உன்னிடத்திலே திரும்பவே மாட்டார். நீ தேவனை விட்டு தூரமாய் இருந்து நீ சொல்கிறாய், நான் பெத்தேலை விட்டு தூரம் வந்துவிட்டேன் அது எனக்கு விளங்குகிறது. நீர் நான் இருக்கும் இடத்திற்கு வாரும். அவர் இங்கே வரப்போவது இல்லை. அவர் சொல்வார் நான் பெத்தேலிலே இருக்கிறே என் மகனே மகளே. புறப்பட்டு வா. அவைகளை விட்டு என்னிடத்திற்குத் திரும்புங்கள் அப்பொழுது நான் உங்களிடத்திற்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். நாங்கள் எந்த விஷயத்தில் திரும்ப வேண்டும் என்கிறீர்கள். ஆண்டவர் திரும்பு என்று சொல்லும் போது, மனிதன் கூறுவது என்னவென்றால், என்னில் பாவம் ஒன்றும் இல்லை. நீர் தான் என்னிடத்திற்கு வரவேண்டும். நீர் தான் எங்கள் விண்ணப்பத்திற்குப் பதில் கொடுக்கவில்லை. நீர் தான் எங்களுக்கு அற்புதம் செய்யவில்லை. நீர் தான் சத்துருக்கள் மேற்கொள்ள இடம் கொடுத்தீர். நீர் தான் எங்களை விட்டுத் தூரமாய் இருக்கிறீர். ஆண்டவர் சொன்னார் யாக்கோபைப் பார்த்து யாக்கோபு யார் யாரை விட்டுத் தூரம் போனது நானா அல்லது நீயா? ஆண்டவர் எங்களை விட்டு தூரம் போவாரா? இல்லை நாங்கள் தான் தூரம் போயிருக்கிறோம். வெளி 2:5 1.நினைத்து 2.மனந்திரும்பி 3.ஆதியிலே செய்த கிரியைகளை செய். அது தான் மனந்திரும்புதலின் அடையாளம். நீ பெத்தேலுக்குத் நாளைக்கு அல்ல இன்றைக்ககே திரும்பாமல் அங்கேயே இருந்து கொண்டு கிரியைகளைச் செய்ய முடியாது. ஆதியிலே செய்த கிரியைகள் என்ன? எவ்வளவோ நேரம் ஜெபத்திலே தரித்திருந்தாய், உபவாசம் இருந்தாய், Sunday School போனாய், விசுவாசத்திலே உறுதியாய் இருந்தாய், வேதத்திலே பிரியமாய் இருந்தாய். 

நீ இந்த மூன்று காரியங்களையும் செய்து பெத்தேலுக்குத் திரும்பவில்லையென்றால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து பெத்தேலை விட்டு தூரமாய் போய் இருக்கிறவனே! நான் உன்னிடத்தில் வந்து உன் விளக்குத்தண்டை அதினிடத்தினின்று நீக்கிவிடுவேன். பிரியமானவர்களே ஆண்டவர் இந்த வசனங்களை எபேசு சபைக்கு எழுதினார். எபேசு சபை மனந்திரும்பவில்லை. எபேசு சபை பெத்தேலுக்குத் திரும்பவில்லை. என்ன நடந்தது தெரியுமா? ஒரு அருமையான ஆவிக்குரிய ஊழியம் இருந்தது எபேசு சபையிலே. ஆனால் இந்த எபேசு சபை ஆண்டவர் பேசும் போது தன்னுடைய இருதயத்தைக் கடினப்படுத்தி பெத்தேலுக்குத் திரும்பவில்லை. உங்களுக்குத் தெரியுமா அதனால் எபேசுவிலே ஒரு சபையாகிலும் அதன் பின்பதாக உருவாக்கப்படவில்லை. அதற்குப் பிறகு எபேசுவிலே ஒரு மனிதனாகிலும் இரட்சிக்கப்படவில்லை. இன்றைக்கு நாம் பார்க்கும் போது எபேசுவிலே இஸ்லாமியர்கள் ஆக்கிரமித்து, ஒரு சபை கூட இல்லாமல் போயிற்று. எபேசு சபை தேவனிடத்திலே திரும்பாதபடியினால் தேவன் விளக்குத்தண்டை எடுத்துப்போட்டார். இந்த வசனம் 2000 வருடங்களுக்கு முன்னே பேசப்பட்டது. இன்றைக்கு வரைக்கும் இரட்சிப்பு என்பதே கிடையாது. எல்லாம் வரட்சியாய்ப் போய்விட்டது. தேவன் அன்பானவர் தான், தேவன் மனதுருக்கம் உடையவர் தான், தேவன் உன்னை அனணக்கிறவர் தான் ஆனாலும் அவர் உன்னையும் என்னையும் பார்த்து மகனே மகளே நீ மனந்திரும்ப வேண்டும் என்று சொல்கிற நேரத்திலே கீழ்ப்படிய வேண்டும். இல்லையென்றால் அவர் எடுத்து விடுவார். நீ நடமாடுகிற ஒரு பிணமாய் சபையில் இருப்பாய். உன்னுடைய வாழ்க்கையிலே சந்தோஷம் என்பதே கிடையாது. நீ ஆவிக்குரிய கிறிஸ்தவன் தான், ஒரு காலத்திலே கர்த்தரால் வல்லமையாய் பயன்படுத்தப்பட்டா பாத்திரம் தான். ஆனால் இன்று உனக்குள்ளே சந்தோஷம் இல்லை. உனக்குள்ளே ஜெபம் இல்லை. உனக்குள்ளே வைராக்கியம் இல்லை. உனக்குள்ளே தேவ வசனம் இல்லை. முகமூடி வாழ்க்கை. மனிதன் வெளியரங்கத்தைப் பார்க்கிறான், ஆனால் கர்த்தரோ உள்ளரங்கத்தைப் பார்க்கிறார். 

வெளி 3:19 ஏன் ஆண்டவர் சிட்சிக்கிறார். நான் நேசிக்கிறவர்கள் எவர்களோ….. நாம் பெத்தேலுக்குத் திரும்புகிற நேரம் தேவன் நம்மை சும்மா கொண்டு வரமாட்டார். உன்னை சிட்சிப்பார். சிலர் ஒருவேளை அந்த சிட்சைக்குள்ளாலே இப்பொழுது போய்க் கொண்டு இருப்பீர்கள். ஏன் எனக்கு இந்த நிலை என்று கேட்கலாம். நீ பெத்தேலை விட்டு தூரம் போய் விட்டாய். எனக்கு நீ வேண்டும். எப்படி எங்களுடைய பிள்ளைகள் தவறு விடும் போது பிரம்பைக் கையாள்கிறோமோ அதே போல் தான் ஆண்டவர் சிட்சிப்பார். அவர் சொன்னார் நான் கடிந்து கொண்டு சிட்சிக்கிறேன். ஆகையால் நீ யாக்கிரதையாய் இருந்து மனந்தரும்பு. 

எபி 12:6-7 யாரை அவர் சிட்சிக்கிறார்? எவர்கள் மேலே அன்பாய் இருக்கிறாரோ அவர்களையே அவர் சிட்சிக்கிறார். கர்த்த்ர் உன்னை சிட்சிக்கிறாரா? அவர் உன்னை நேசிக்கிற படியினால் தான் அப்படி செய்கிறார். அவர் உன்னைத் தள்ளி உன்னைப் புறம்பாக்கியிருந்தால் அவர் உன்னைச் சிட்சிக்கமாட்டார். அவர் தண்டிப்பார். நாம் பாவத்தை செய்து விட்டு மன்னிப்புக் கேட்டு விட்டுப் போக முடியாது. சிட்சிப்பார் அவர் உன்னைத் தண்டிப்பார். நீ தப்பமுடியாது. நீங்கள் தண்டனையில் இருந்து சீக்கிரமாய் வெளியே வர வேண்டுமா? பெத்தேலுக்குத் திரும்பு. அங்கே தான் ஆரோக்கியம் இருக்கின்றது. பெத்தேலுக்குத் திரும்பு அங்கே தான் நீ தேடுகிற இளைப்பாறுதலும் நிம்மதியும் இருக்கின்றது. 

யாக்கோபு 20 வருடங்கள் தேவனை விட்டு பின்மாற்றத்திலே வாழ்ந்த போதிலும், தேவன் அவனோடு பேசின போது, தேவனுடைய சத்தம் அவனுக்குக் கேட்டது. அருமையான தேவ பிள்ளையே நீ எவ்வளவு தான் தேவனை விட்டு ஓடிப்போக நினைத்தாலும், நீ எவ்வளவு தொலைவிலே, எவ்வளவு காலங்கள் தேவனை விட்டு ஓடிப் போயிருந்தாலும், அவர் பேசும் போது உன் முழங்கால்கள் தள்ளாடும். உன் இருதயம் துடிக்கும். உன் கண்கள் கலங்கும். முழங்காலிலே விழுவாய். அவர் பாதத்திலே உன்னை அர்ப்பணிப்பாய். ஆண்டவர் யாக்கோபோடே 20 வருடங்களுக்குப் பிறகு பேசுகிறார். மனந்திரும்பு! பெத்தேலுக்குத் திரும்பு யாக்கோபு! யாக்கோபு தேவனோடு போராடவில்லை. அவன் தேவனோடு வாக்குவாதம் பண்ணவில்லை. உடனே அவன் சொன்னான் திரும்புவோம். ஆதி 35:2 அப்பொழுது யாக்கோபு தன் வீட்டாரையும்…. யாக்கோபு தன் மனைவி, பிள்ளைகள், வேலைக்காரியிடம் சொல்கிறான் அந்நிய தேவர்களை விளக்குங்கள் என்னோடு வாருங்கள் பெத்தேலுக்குத் திரும்புவோம் என்றான். வீட்டிலே இருக்கிற தலைவனுக்கு இருக்கிற உத்தரவாதம் தான் ஓய்வு நாட் பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்புவது. அம்மா இல்லை அப்பா. நீங்கதான் குடும்பத்திற்குத் தலைவன். உங்களுடைய உத்தரவாதம் தான் உன் குடும்பத்தை சபைக்குக் கொண்டு வருவது. குடும்பத்தை விசுவாசத்திலே நடத்துவது. அது உங்களுடைய உத்தரவாதம். குடும்பத்தை பெத்தேலுக்குள்ளே நடத்து. உத்தரவாத்தை உதறித்தள்ள வேண்டாம். இது தகப்பனின் உத்தரவாதம். யோபு சொன்னான் தன் மனைவியைப் பார்த்து “பயித்தியகாரியைப் போல் பேசுகிறாயே”. யாக்கோபு குடும்பத்தைப் பார்த்து சொல்கிறான் பெத்தேலுக்கு திரும்புவோம். ஆமென்!!! உங்களில் எத்தனை பேர் உங்களுடய பிள்ளைகளை Sunday Schoolகு அனுப்புகிறீர்கள். பெற்றோர் கவணமாய்க் கேளுங்கள். உங்கள் உத்தரவாதம் ஒவ்வொரு ஞாயிறு ஆராதனைக்கு உன் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் கலந்து கொள்வது. மற்ற மற்ற காரியங்களுக்கு பிள்ளைகள் நேரத்திற்குப் போவார்கள் ஆனால் சபைக்கு மாத்திரம் நேரத்திற்கு வரமாட்டார்கள். 

2வது பெத்தேலுக்கு வந்தால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? ஆதி35:2 அந்நிய தேவர்களை விளக்க வேண்டும். யாக்கோபு திருமணம் பண்ணின. ராகேலும், லேயாளும் அவர்களுடைய தகப்பன் லாபானுடன் அந்நிய தேவர்களை வீட்டிலே வைத்து சேவித்தவர்கள். யாக்கோபு தேவனைத் தேடின ஒரு மனிதன். கேளுங்கள் நீ இரட்சிக்கப்பட்டது உண்மை, நீ பரிசுத்த ஆவியிலே நிரப்பப்பட்டது உண்மை, நீ ஆவிக்குரிய வரங்களால் நிரப்பப்பட்டது உண்மை ஆனால் உன் வாழ்க்கையிலே இடையிலே ஏதோ ஒன்று நடந்து விட்டது (திருமணம், நண்பன்). அந்நிய நுகத்திலே சம்பந்தம் கலவாதே. நீ சொல்கிறாய் ஒரு அந்நியனை Love பண்ணி அவனைச் சபைக்குள்ளே கொண்டு வந்தால் எல்லாம் முடிந்தது என்று. ஆனால் நான் சொல்கிறேன் கேள். அவன் சபைக்கு வருவதற்கு முன்னே சிறுபிராயமாய் இருக்கும் போது அவனுடைய தாய் தகப்பன் அவர்களை அந்நிய தேவர்களுக்கென்று படைத்து விட்டார்களே. அதற்கு என்ன செய்யப் போகின்றாய். சாத்தான் சொல்வான், இவனை இவனுடைய தாய் தகப்பன் எனக்குத் தந்துவிட்டார்கள், அவள் எனக்குத் தான் சொந்தம் என்பான். அந்த உடன்படிக்கையில் இருந்து அந்த மகன் விடுதலை பெறும் வரைக்கும் அவன் இரட்சிக்கப்படவும் முடியாது. அது உங்களுக்குத் தெரியுமா? அந்தப் பிசாசு அவனை விடாது. அந்நிய நுகத்திலே நீ சம்பந்தம் கலந்தாய். விக்கிரகம் உன் வாழ்க்கையிலே உன் ஆத்துமாக்குள்ளே, உன் வீட்டிற்குள்ளே வந்து இறங்கி விட்டது. Mobile Phone, Facebook, Game, Tv, சினிமா இவைகளெல்லாம் ஒரு விக்கிரகம். இன்றைக்கு அநேக விக்கிரகங்கள் உங்கள் வாழ்க்கையிலே வந்து விட்டது. 

35ம் அதிகாரம் அடுத்த பகுதியிலே “உங்கள் வஸ்திரங்களை மாற்றுங்கள் என்று சொல்கிறான்”. யாக்கோபினுடைய மகள் தீனாள் என்பவளை ஒரு கிராமத்திலுள்ளவர்கள் கெடுத்தார்கள். யாக்கோபினுடைய புத்திரர் அங்கே போய் அத்தனை ஆண்களையும் கொலை செய்து, பெண்களையெல்லாம் சூறையாடி, நகைகளையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்துவிட்டார்கள். அவர்களுடைய வஸ்திரத்தில் இரத்தக்கறைகள் காணப்பட்டது.. அதினாலே தான் யாக்கோபு சொன்னான் உங்கள் வஸ்திரங்களை மாற்றுங்கள். உங்கள் வஸ்திரங்கள் எல்லாம் கறைப்பட்டிருக்கிறது. அதனுடைய அர்த்தம் என்ன? நாம் பெத்தேலுக்குத் திரும்பும் போது, ஆம் நாங்கள் தவறியிருக்கிறோம், ஆம் நாங்கள் பாவம் செய்திருக்கிறோம் என்று தேவனிடத்திலே அதை ஏற்றுக் கொண்டு, அதை அறிக்கை செய்து, இனிமேல் இந்தப் பாவம் வேண்டாம் என்று சொல்லி அவருடைய நீதியின் வஸ்திரத்தை தரித்துக் கொண்டவர்களாய் நாம் அவரிடத்திலே வருவோமாக. அல்லேலூயா!!! 

கடைசியாக அருமையான ஒரு சத்தியத்தை நான் சொல்லி முடிக்க விரும்புகிறேன். ஆதி35:5ம் வசனத்திலே பின்பு பிரயாணம் புறப்பட்டார்கள்… கவணமாய்க் கேளுங்கள். இது மிகவும் முக்கியமானது. உங்கள் நிலமையை அறிந்த நீற்கள், கர்த்தர் உங்களை அழைத்த பெத்தேலுக்குத் திரும்புகிறீர்களா? சாத்தான் உங்களை விடமாட்டான். உங்கள் நண்பர்கள், உறவினர்கள் உங்களை விடமாட்டர்கள். சில நேரம் உங்கள் கணவர், மனைவி உங்களை விடமாட்டார்கள். சில நேரம் நீ பெத்தேலில் இருக்கும் பொழுது திருமணமாகியிருக்கவில்லை. இப்பொழுது திருமணமாகி உங்களுக்கு பிள்ளை இருக்கிறர்கள். பிள்ளைகள் உன்னை போகவிடாமல் தடை பண்ணுவதர்கள். இப்பொழுது உனக்கு விரோதமாக யுத்தம் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். நீங்க ஏன் ஜெபிக்கிறீர்கள், ஏன் உபவாசம் பண்ணுகிறீர்கள், ஏன் வேதத்தை வாசிக்கிறீர்கள் என்று கேள்விகளைக் கேட்பார்கள். பெத்தேலுக்குத் திரும்பு. உனக்கு விரோதமாய் யுத்தம் பண்ணுவார்கள். யார் என்று கேட்கிறீர்களா? உன் தாய், உன் தகப்பன், உன் உறவினர், உன் சொந்தப் பிள்ளை்கள், உன் சொந்தம். ஆனால் உண்மையாய் நீங்கள் மனந்திரும்பினால், பெத்தேலுக்கு உண்மையாகப் போக உள்ளத்தின் ஆழத்திலே கர்த்தருக்கு முன்பதாக தீர்மானம் பண்ணிக் கொண்டால்! கர்த்தர் உன்னைச் சூழ பாளயம் இறங்குவார். அல்லேலூயா!!! யாக்கோபு தன்னுடைய வாழ்க்கையிலே ஒரு நல்ல தீர்மானத்தை எடுக்கிறான். அவனுடைய மாமா அவனுடைய சேனைகளோடே இவர்களைக் கொல்லும்படிக்கு வருகிறார்கள். ஆனால் கர்த்தரோ அவர்களைச் சூழவும் பாளயமிறங்கினார். ஒருவேளை நீ பெத்தேலுக்குப் போக தீர்மானித்ததினாலே, எவர்கள் உனக்கு எதிராய்க் கையை நீட்டினார்களோ வாயைத் திறந்தார்களோ தேவன் அவர்களுக்கு பயங்கரத்தை உண்டு பண்ணுவார். அல்லேலூயா!!! உன் Boy Friend, Girl Friend a விட்டு பெத்தேலுக்குக் கர்த்தர் உன்னை அழைக்கிறார். இல்லை நீ கஷ்டப்படுவாய். நீ பெத்தேலுக்குத் திரும்பு. யாராயிருக்கட்டும் நீ பெத்தேலுக்குத் திரும்பு. 

அருமையானவர்களே இன்று எத்தனை பேரோடு ஆண்டவர் பேசினார். நீ பெத்தேலுக்குத் திரும்ப வேண்டும். கர்த்தர் உன்னை நேசிக்கிறார். அவர் உன்மேலே கரிசனையாய் இருக்கிறார். கன்மலையில் இருந்து .தோன்றி எடுக்கப்பட்ட துரவாய் நீ இருக்கிறாய் அல்லவா. பெத்தேலுக்குத் திரும்பு கர்த்தர் பெரிய காரியம் செய்வார். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார். ஆமென். 

பாஸ்டர் றொஷான் மகேசன்.

No comments:

Post a Comment