வேதம் முழுவதிலும் தேவன் விசுவாசிகளை பெயர் சொல்லி அழைக்கிறார். நான் உன்னை பெயர் சொல்லி அழைக்கிற தேவன் என்று ஏசாயா 45:3ல் வாசிக்கிறோம் . வேதத்தில் உள்ள ஒவ்வொரு புஸ்தகத்திலும், நமக்கு பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏசாயா புஸ்தகத்தில் என் ஜனம், என் தாசன், யாக்கோபே, இஸ்ரவேலே என்றும், உன்னதப்பாட்டில் என் பிரியமே, என் ரூபவதியே, என் மணவாளியே என் சகோதரியே, என் உத்தமியே என்றும் அழைக்கிறார். இப்படி பழைய ஏற்பாட்டில் மட்டுமல்ல, புதிய ஏற்பாட்டிலும் நமக்கு பெயரிடப்பட்டிருக்கிறது. அப்போஸ்தலர் புஸ்தகத்தில் சபை மக்களுக்கு ஐந்து விதமான பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவைகளை தொடர்ந்து தியானிப்போம்.
இருக்கிறவன் எவனும் தோன்று முன்னமே அவன் பேரிடப் பட்டிருக்கிறான். (1பேது6:10). நமக்கு பெயரை சூட்டியவர்கள் பெற்றோர் களே. ஆனால் ஆவிக்குரிய பெயர்களை தேவன் வேதத்தில் வைத்திருக்கிறார் . பெயருக்கேற்ற வாழ்க்கை உலகத்தில் அநேகருக்கு இல்லை. இருகண்ணும் இல்லாத வனுக்கு கண்ணாயிரம் என்றும், கறுப்பாயிருபவர்களுக்கு வெள்ளையம்மா என்றும், புத்தியில்லா அநேகர் ஞானம் என்றும், சுகமில்லாத அநேகர் ஆரோக்கியம் என்றும், இதுபோல் எத்தனையோ பெயர் களில் ஜனங்கள் இருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் ஆவிக்குரியவர்கள் தேவன் அழைக்கும் பெயர்களுக்கு ஏற்ற வர்களாய் இருக்க வேண்டும்.
அப்போஸ்தலர் புஸ்தகத்தில் சபையார் அழைக்கப்படும் வல்லமையான பெயர் "விசுவாசிகள்" என்பதாகும். (அப் 2:1,4,42ல்) "அவர்கள்" என்று சொல்லப்பட்டவர்கள் எவர்கள்? வசனம் 44-ல் "விசுவாசிகள்" என்று சொல்லப்படுகிறது. தேவன் நமக்கு வைத்திருக்கும் முதல் பெயர் "விசுவாசிகள்" என்பதாகும்.
"விசுவாசிகள்: விசுவாசம் என்பது வேத வசனங்களின்படி மூன்று விதமான அனுபவமாகும்.
1. தேவன் ஒருவர் உண்டு என்று விசுவாசிப்பது . (எபி11:6, யாக் 2:19).
2. தம்மை தேடுகிறவர்களுக்கு பலன் அளிக்கிறார் என்று விசுவாசிப்பது . (எபி11:6, ரோம 14:23).
3. வரமாகிய விசுவாசம். (கொரி 12:9, அப் 6:8).
சபை மக்கள் அனைவருக்கும் இந்த அனுபவங்கள் மிக அவசியம்.
தேவன் ஒருவர் உண்டு என்பது பொதுவான விசுவாசம். இந்த நம்பிக்கை உலகத்திலுள்ள எல்லாருக்கும் உண்டு. பிசாசுகளுக்கு கூட இந்த விசுவாசம் உண்டு. ஆனால் அவன் விசுவாசி அல்ல.தம்மை தேடுகிறவர்களுக்கு பலன் அளிக்கிறார் என்ற விசுவாசம் சபை மக்களுக்கு மட்டுமே உண்டு. இவர்களே விசுவாசிகள் என்று அழைக்கப்படுவர்.
வரமாகிய விசுவாசம், தேவனோடு நெருங்கி வாழும் சபையார் அவரிடம் நன்மையானதை மட்டும் அனுபவிக்க விசுவாசத்தை பயன்படுத்தாமல்; தேவனுடைய வல்லமையை வெளிப்படுத்தவும் விசுவாசத்தை பயன்படுத்த வேண்டும். நாம் விசுவாசிகள் என்று சொல்லிக்கொண்டால் மாத்திரம் போதாது. விசுவாசத்தின் அடையாளம் நம்மில் காணப்பட வேண்டும். அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டு (யோவான் 1 :12 ) ; விசுவசமுள்ளவர்களாகி ஞானஸ்நானம் பெற்று இரட்சிக்கப்பட்ட நாம் (மாற்கு 16:16,). இவ் வசனங்களில் சொல்லப்படும் விசுவாசிகளின் அடையாளங்களை வெளிப்படுத்தாமல் இருப்பது எப்படி? இந்த அடயாளங்கள் உள்ளவர்கள் தான் விசுவாசிகள் என அடையாளப்படுத்தப்படுவர் .
1 . விசுவாசிகள் பிசாசுகளை துரத்துபவர்கள்.
விசுவாசிகளுக்கு இருக்கும் முதலாவது அடையாளம் "என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்". பேய்களை ஓட்டுபவர்களுக்கு பெயர் தான் விசுவாசிகள். ஆனால் இன்றைக்கு விசுவாசிகளுக்கே பேய் ஒட்டவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் பரவாயில்லை. உங்களுக்குள் இருக்கும் பேய்களை ஓட்டிப் பழகினால் மற்றவர்களுக்குள் இருக்கும் சாத்தானை சுலபமாக ஓட்ட முடியும். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பிசாசின் கிரியைகள் இருக்கின்றது என்பது உண்மை. ஆனால் விசுவசிகளுக்குள் பிசாசின் கிரியை இருக்கிறதா? ஆம் ! அநேக விசுவாசிகள் சபையில் தேவனை ஆராதிக்கும் போது, அந்நிய பாஷைகளை பேசி தேவனை மகிமைப்படுத்துகிறார்கள். நன்றாக ஸ்தோத்திரபலிகளைசெலுத்தி தேவனை மகிமைப்படுத்துகிறார்கள். கதறி அழுது ஜெபிக்கிறார்கள். ஆவியிலே களிகூர்ந்து மகிழ்கிறார்கள். ஆனால் , அப்படிப்பட்டவர்கள் வீட்டிற்குச் சென்றால் சண்டை போடுகிறவர்களும், அவதூறு பண்ணுகிறவர்களும், கோபக்காரர்களும் , இன்னும் அநேக இரகசிய பாவங்களுக்கு அடிமையானவர்களுமாய் இருக்கின்றார்கள். இதற்கு காரணம் என்ன?
முதலாவது ஒரு மனிதன் கிறிஸ்துவை பற்றின சுவிசேஷத்தை ஆவியிலே கேட்டு, ஏற்றுக்கொண்டு 1பேதுரு 4:6 தன் பாவங்கள் போக கழுவப்பட வேண்டும் என்ற உணர்வோடு இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து , அறிக்கை செய்து அவரை தன் இருதயத்திலே அதாவது தன் ஆவியிலே ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்படுகிறான். (2கொரி4:6, 1கொரி 5:5 ) அவனுடைய ஆவி முதலாவது இரட்சிப்பை பெறுகின்றது. இயேசு கிறிஸ்துவும் நம்முடைய ஆவியிலே தங்கியிருக்கிறார். (2தீமோ4:22, பிலே.25), நம் ஆவியில் தான் தேவனை சேவிக்கிறோம் . ரோம1:9,22 கிறிஸ்து நமக்குள்ளிருப்ப்பதால் நம்முடைய ஆவியில் ஜீவன் இருக்கிறது. ரோம 8 :10 .
ஆகவே ஒரு மனிதன் மனந்திரும்பும் போது அவன் ஆவி இரட்சிப்பை அடைகின்றது. அதாவது உயிர்பிக்கப்படுகிறது. போது சரீரம் செத்ததாய் இருக்க வேண்டும். ரோம 1:10
இந்த இடத்தில் தான் அநேகர் தவறுகிறார்கள். அவர்கள் சரீரம் பாவத்திற்கு சாகாமலும், சரீரத்தின் கிரியைகள் ஆவியினாலே அளிக்கப்படாமலும் இருக்கிறபடியால் (ரோம8:13, கலா 5:16 ). ஆவிக்கேற்றபடி நடத்தப்படாமலும், இருக்கும் போது மாம்சத்திற்கேற்ற கிரியைகள் அடிக்கடி வெளிப்படுகின்றது. (உ+ம்) மத் 16:16 -17ல், பிதாவின் வெளிப்பாட்டை பெற்று கிறிஸ்துவை ஜீவனுள்ள தேவனுடைய குமாரன் என்று அறிக்கையிட்டான். இது அவனுடைய ஆவியில் வந்த வெளிப்பாடு. ஆனால் 22 :33ல், வசனங்களில் "எனக்கு பின்னாலே போ சாத்தானே" என்று பேதுருவை பார்த்து சொல்ல காரணம் என்ன? அவனுடைய மாம்சம் இப்போது கிரியை செய்கிறது. மனுஷருகேற்றவைகளை சிந்திக்கிறான். இதற்கு கரணம் சாத்தான் நமது சிந்தையில் இருக்கிறான். சுருக்கமாக சொன்னால் ஆவியிலே இயேசுவும் மாம்சத்திலே சாத்தானும் இருக்கிறபடியால் தான் இரண்டு கிரியைகளும் சிலரிடத்தில் வெளிப்படுகிறது. மனதிலே (ஆவியிலே) தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்கும் மாம்சத்தினாலே பாவபிரமாணத்திற்கும் ஊழியம் செய்கிறேன் என்றார் பவுல் (ரோம 7:25). ஆனால் அவர் அப்படி இருக்கவில்லை. தன் மாம்சத்தை ஒடுக்கி, தன் ஆவிக்கு கீழ்ப்படுத்தி வாழ்ந்தார் என்பதற்கு ரோமர் 8ம் அதிகாரம் சாட்சி.
அன்பான விசுவாசிகளே! உங்களுக்குள்ளும் இந்த இரட்டை வாழ்க்கை இருக்குமானால், உங்கள் சிந்தையில் குடியிருக்கும் பிசாசின் கிரியைகளை இயேசுவின் நாமத்தில் விரட்டியடியுங்கள்.
போதகர் ஒருவர் ஆராதனையில் பிரசங்கித்துக் கொண்டிருக்கும் போது, ஓர் சகோதரி பிசாசின் பிடியினால் சத்தமிட்டு அலறினார்கள். அச் சமயம் போதகர் இயேசுவின் நாமத்தைக் கொண்டு அதட்டினார். பிசாசு போய்விட்டது. மறுபடியும் பிரசங்கத்தை தொடர்ந்தார். சற்று நேரம் கழித்து அதே சகோதரி ஆட ஆரம்பித்தார். போதகரும் , இயேசுவின் நாமத்தைக் கொண்டு வெளியே போ என்று கட்டளையிட்டார். அந்த ஆவி போய்விட்டது. திரும்பவும் அந்த சகோதரி எழுந்து சத்தமிட்டு ஆட ஆரம்பித்தார்கள். போதகருக்கு கடும் கோபம் வந்து விட்டது. உடனே அவர் அந்த அசுத்த ஆவியை பார்த்து இவ்வளவு நேரம் நீ எங்கே இருந்தாய்? என்று கேட்டார். உடனே அந்த பிசாசு உங்ககிட்டதான் இருந்தேன் என்றது.
நாகரீகமான மக்களுக்குள் அசுத்த ஆவிகள் இருந்தால், அதுவும் நாகரீகமாகவே நடந்துகொள்ளும். படிப்பறிவு இல்லா பாமரமக்களுக்குள் இந்த ஆவிகள் இருந்தால் அவைகள் ஆடவும்,அலைக்கழிக்கவும் செய்யும். எப்படியிருந்தாலும், அவைகளை ஓட்ட வேண்டும் என்பது தான் சத்தியம். இயேசு கிறிஸ்துவானவர் எங்கு சென்றாலும் பேய்களை துரத்துகிறவராய் இருந்தார். ஆகவே அவருக்கு பெயல்செபூல் (பிசாசுகளின் தலைவன்) என்று பெயர் வைத்தார்கள். ஆனால் அவரோ தேவனுடைய விரலினாலும், தேவ ஆவியினாலும் பிசாசுகளை துரத்தினார் .( மத்12 :28 , லூக் 11 :20 ). தன்னிடம் வந்த சாத்தானையும் மத்தேயு 4 :11 . மற்றவர்களிடம் இருந்த சாத்தானின் ஆவிகளையும் அவர் துரத்தினார் . பிசாசின் கிரியைகளை அழிக்கும்படிக்கு வெளிப்பட்ட தேவகுமாரனாகிய இயேசு, தமது சீஷர்களுக்கும் அந்த கிருபையை வாக்குப்பண்ணினார் . மத் 10:1 , லூக் 9:1 -3 ஆகிய வசனங்களில் சகல பிசாசுகளையும் துரத்தக்கூடிய அதிகாரத்தையும் வல்லமையையும் கொடுத்தார். இந்த வாக்குத்தத்தத்தை பெற்ற சீஷர்கள் கிராமங்களுக்குச் சென்று பிசாசுகளைத் துரத்தி சந்தோஷப்பட்டார்கள். லூக் 10:17 அபிஷேகம் பண்ணப்படாத சீஷர்களே வாக்குத்தத்த வசனத்தை விசுவாசித்து பேய்களை ஓட்டுவார்களானால் , அபிஷேகம்பண்ணப்பட்ட நீங்களும், நானும் ஏன் பேய்களை ஓட்ட முடியாது? உங்கள் விசுவாசமே உலகத்தை ஜெயிக்குமானால், ஏன் பிசாசுகளை ஜெயிக்க கூடாது? நிட்சயமாக நம்மால் சாத்தானை ஜெயிக்க முடியும் . பிசாசுகளை ஓட்டுவது ஓர் வரம் அல்ல என்பதை சபையார் அறிய வேண்டும். 1 கொரி 12 :8-11 வசனங்களில் பிசாசுகளை துரத்துவது ஓர் வரம் என்று சொல்லப்படவில்லை. ஆகையால் விசுவாசிகள் அனைவருமே இந்த கிருபையை பெற்றவர்கள்.
No comments:
Post a Comment