Pages

Tuesday, 22 January 2013

Why do we have Sunday Worship நாம் ஏன் ஞாயிறு ஆராதனை செய்கிறோம்

1.வாரத்தின் முதல் நாளிலே (ஞாயிறு) இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்தார் .உயிர்த்தெழுதலின் நாளான மீட்பின் நாளை நாம் ஆராதனை நாளாக விசேஷப் படுத்தியிருக்கிறோம். மத்:28 :1-6 

2.உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்து தமது சீஷர்களுக்கு தரிசனம் அளித்ததும் வாரத்தின் முதல் நாள் ஞாயிற்றுக் கிழமையில் தான். யோவா 20:19;மாற்கு 16:9. 

3.மறுபடியும் எட்டு நாளைக்கு பின்பு சீஷர்கள் கூடி வந்திருக்கும் போது (முதல் நாள் ஞாயிறு, எட்டாம் நாளும் ஞாயிறு) இயேசு அவர்கள் நடுவில் வந்து தொமாவோடு பேசினார். 

4.அநாதி காலத்திற்கு முன்பே, தேவனுடைய தீர்மானத்தில் உருவாக்கப் பட்ட சபை (எபே 3 :9 ,10) இயேசு கிறிஸ்துவினால் வாக்குத்தத்தம் பண்ணபட்ட சபை மத்16:18 பெந்தகோஸ்தே என்னும் ஐம்பதாம் நாளான ஞாயிறு அன்று உலகத்தில் பிறந்தது புதிய ஏற்பாட்டில் சபை பிறந்த நாளான ஞாயிறு நமக்கு ஆராதனை நாள். (அப் 2:1). 

5.இயேசுகிறிஸ்துவினால் வாக்குப்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியானவர் பொழிந்தருளப்பட்ட நாள் ஞாயிறு. ஆகவே ஆவியானவர் அருளப்பட்ட நாளை அனுசரிக்கிறோம். (அப் 2:1-4). 

6.அப்போஸ்தலர்களும், ஆதி சபையாரும், அப்பம் பிட்கும்படி வாரத்தின் முதல் நாள் ஞாயிறு அன்று கூடி வந்தார்கள். ஆகவே நாமும் ஞாயிறு அன்று கூடி ஆராதிக்கிறோம். (அப் 20:7). 

7.வாரத்தின் முதல் நாள் தோறும் காணிக்கை சேகரித்தார்கள். ஞாயிறு தோறும் ஆராதனைக்கு கூடி வரும் போதெல்லாம் காணிக்கை சேகரித்தார்கள். (1கொரி 16:2). 

8.ஏழு நாளும் கர்த்தருக்கு தகனபலி செலுத்தக் கடவீர்கள்; எட்டாம் நாள் உங்களுக்கு சபை கூடும் பரிசுத்த நாள். அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்ய வேண்டாம்.முதலாம் நாளிலும் ஓய்வு. எட்டாம் நாளிலும் ஓய்வு. (லேவி:23 :36 -39). 

மேற்கண்ட வசனத்தின் படி ஏழாம் நாளை ஓர் குறிப்பிட்ட காலம்வரை அனுமதித்து, பின்பு வாரத்தின் முதல் நாளையும், எட்டாம் நாளையும், ஓய்வு நாளாக்க தேவன் கொண்டிருந்த சித்தமே இது. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த காலம் வரை சனியை ஓய்வு நாளாக்கி, உயிர்த்தெழுந்த பின்பு வாரத்தின் முதல் நாளும் (ஞாயிறு) எட்டாம் நாளும் (ஞாயிறு) ஓய்வு நாளாக்கப்பட்டது என்பது தான் சத்தியம். ஆகவே தேவனுடைய சித்தப்படியே அவருடைய இரகசியத்தை அறிந்து சபை ஞாயிறு ஆராதனை செய்கிறார்கள். 

9.ஏழாம் நாள் எழுத்தின்படியான நாள். எழுத்து கொள்ளும், ஆவியே உயிர்பிக்கும். வாரத்தின் முதல் நாள் மீட்பின் நாள். ஆவிக்கேற்ற ஆராதனையிலே ஆவிகேற்ற பலிகளை செலுத்தி, ஆவியோடும் உண்மையோடும் தேவனைத் தொழுதுகொள்ளும் நாள் வாரத்தின் முதல் நாள் ஆகும். இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்படவர்கள் மீட்பின் நாளான ஞாயிறு, ஆராதனை செய்கிறார்கள். (எபே 5:18,19, 1 பேதுரு 2:5, யோவா 4:24). 

மேற்கண்ட காரணங்களால் ஞாயிறு, ஆராதனையின் நாளாக அனுசரிக்கப்படுகிறது. ஆனால் புதிய ஏற்பாட்டில் சொல்லபடாத ஏழாம் நாளை ஆராதனையின் நாள் அல்லது ஓய்வு நாள் என்று எண்ணுவது வேதவார்த்தையின்படி தவறானதாகும். 

ஒழிந்து போன ஓய்வு நாளான சனியை ஏற்று, ஞாயிறை தள்ளுவது உமியை தின்று அரிசியை தள்ளுவதும், தோலை தின்று பழத்தை எறிவதற்கு சமம். 

புதிய ஏற்பாடில் ஏழாம் நாளை அனுசரிப்பது பற்றி வேதம் ஒன்றும் சொல்லவில்லை. இயேசு கிறிஸ்து ஓய்வு நாளை பழைய ஏற்பாட்டின் படி அனுசரியாமல் அதை மீறினார். யோவான் 9:16 ;5,18 மத்12:1-15, லூக்கா 14:1- 6). ஆகவே நாமும் ஓய்வு நாளை (சனி) அனுசரியாமல் மீறுவது பாவம் அல்ல. 

மேலும், புதிய ஏற்பாடில் சொல்லப்பட்ட பாவ பட்டியலில் ஓய்வு நாளை கைகொள்ளாதது பாவம் என்று சொல்லப்படவில்லை. மாற்கு 7:20,23, கலா 5:19,2, எபே 5:3-7,ரோமர் 8:29-32, 2 தீமோ 3:1-5, வெளி 21:8. 

பழைய ஏற்பாடில் கொடுக்கபட்ட பத்து கற்பனைகளில் நான்காம் கற்பனையான ஓய்வு நாளை நினைவு கூறுவாயாக என்ற கற்பனையை தவிர மற்ற ஒன்பது கற்பனைகளுக்கு ஒத்த வசனம் புதிய ஏற்பாட்டில் உண்டு. 

புதிய ஏற்பாட்டில் ஓய்வு நாளை (சனி) நினைவு கூற சொல்லவில்லை. ஆனால் இயேசு கிறிஸ்துவின் மரணத்தை நினைவு கூறும்படி சொன்னார். (1 கொரி 11:24,25). பழைய ஏற்பாட்டின் பிரமாணங்கள் கிறிஸ்துவின் சிலுவையிலே நிறைவேறின. ஆகவே ஓய்வு நாளை குறித்து ஒருவனும் உங்களை குற்றப்படுத்தாதிருப்பானாக. கொலோ 2:14-16. 

ஆகவே நாட்களை விசேஷித்துக்கொள்கிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்கிறான். நாட்களை விசேஷித்துக்கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளாதிருக்கிறான். (ரோமர் 14:6). 

பழைய ஏற்பாட்டின் அடிமைத்தனத்திற்குட்படாமல் புதிய ஏற்பாட்டின் சுயாதீன பிரமாணத்தை கிருபையினாலே நிறைவேற்றுங்கள் .ஆமென்!

No comments:

Post a Comment