கழுதை பேசினால்
என் பெயர் கழுதை .இது தெரியாதா எங்களுக்கு என்று சொல்ல வேண்டாம். காரணம் வீட்டில் நீங்கள் கோபப்படும் போதெல்லாம் மனைவி பிள்ளைகளை திட்டுவதற்கு எங்கள் பெயரைத்தானே பயன்படுத்துகிறீர்கள் .இது சரியா? எங்களில் பல இனம் இருந்தாலும் எங்கள் வேலை ஒன்று தான் பொதி சுமப்பது. பொதி மட்டும் தான் சுமப்போம் என்று எண்ண வேண்டாம்.மனிதர்களையும், தீர்க்கதரிசிகளையும், இராஜாக்களையும் சுமந்தேன்.நாங்கள் சுமந்தவர்களிலே மிகவும் விஷேசமனாவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தான். தேவாலயத்திற்க்கு அவரை நான் சுமந்த போது அநேகர் தங்கள் வஸ்திரங்களை தரையிலே விரித்தார்கள் .நான் அதன் மீது நடந்து சென்றேன் .கழுதையான எனக்கு எத்தனை பெருமை பார்த்தீர்களா? சிலர் மரக்கிளைகள் வெட்டி தரையிலே பரப்பினார்கள். ஏன்? என் கால் இடறி விழுவேன் என்றா?கர்த்தர் என்மேல் இருப்பதால் என் கால்கள் இடறுவதில்லை என்று அவர்களுக்கு தெரியாது போலும்.
நீங்கள் அவரை சுமந்தீர்களா?அவருடைய மரணத்தை எங்கள் சரீரங்களில் சுமந்து திரிகிறோம் என பவுல் சொன்னார். இயேசு கிறிஸ்து பிறந்த போது மரியாள் மடியில் அவரை சுமந்தாள். தேவாலயம் செல்லும் போது நான் அவரை சுமந்தேன், அவர் பரலோகம் சென்ற போது மேகம் அவரை சுமந்தது. அந்த இயேசுவை இன்று நீங்களல்லவா சுமக்க வேண்டும். நான் அவரை சுமந்தவன் மட்டுமல்ல, அவரால் பயன்படுத்தப் பட்டவனும் கூட.
ஒரு சமயம் பிலேயாம் தீர்க்கதரிசி தேவசித்ததிற்கு மாறாக சென்ற போது தேவதூதன் ஒருவன் வழியிலே நின்றான். இதை அறியாத பிலேயாம் என்மேல் கோபம் கொண்டு உன்னை கொன்று போடுவேன் என்றான். கர்த்தர் என் வாயை திறந்தார். பேசாத மிருகமாகிய நான் மனுஷர் பேச்சை பேசி தீர்க்கதரிசியின் மதிகேட்டை திருத்தினேன். எல்லோருக்கும் தீர்க்கதரிசனம் சொல்லுகிற சில தீர்க்கதரிசிகளுக்கு கழுதை தீர்க்கதரிசனம் சொன்னால் தான் விளங்குகிறது. அதற்காக கர்த்தர் சொன்னார், கர்த்தர் சொன்னார் என்று சில கழுதைகள் சொல்லுகிறபடியால் அவர்கள் தீர்க்கதரிசிகள் என்று எண்ணிவிட வேண்டாம். கர்த்தர் சொல்ல வேண்டிய எல்லாவற்றையும் வேதத்தில் சொல்லிவிட்டார் வேதத்தையும், சாட்சி ஆகமத்தையும் கவனிக்க வேண்டும். ஒருவன் இவைகளின் படி செய்யாவிட்டால் அவனுக்கு விடியற்காலத்து வெளிச்சம் இல்லை. கர்த்தருடைய வார்த்தையின் படியே தீர்கதரிசனம் சொல்லக்கடவன்.
"கழுதை கெட்டால் குட்டிச்சுவறு "என்று சொல்லுகிறீர்களே. நான் காணாமல் போன போது ஒருவன் என்னைத் தேடி வந்தான். கழுதையை தேடிப்போன அவன் சாமுவேலை சந்தித்து இஸ்ரவேலருக்கு இராஜாவாகிற பாக்கியம் அவனுக்கு கிடைத்தது .
தேவ சித்தம் செய்த தீர்க்கதரிசியை நான் பெத்தேலுக்கு சுமந்து சென்றேன். அவன் சொன்ன தீர்க்கதரிசனத்தின்படி தேவன் செய்தார். ஆனால் தேவன் சொன்ன வார்த்தையின் படி அந்த தீர்க்கதரிசி செய்யாமல் அப்பம் புசித்து, தண்ணீர் குடித்து தேவனுடைய வார்த்தையை மீறினபடியால் போகும் வழியில் ஒரு சிங்கம் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனை கொன்றது. சிங்கம் என்னை கொல்லவில்லை .நான் மிருகமாக இருந்தாலும் தேவ சித்தத்திற்கு என்னை ஒப்புக்கொடுத்தவன் தெரியுமா?
"கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை "என்று சொல்கிறீர்களே ! இது சரியா? என்னைப்பற்றி ஏசாயா சொன்னது உங்களுக்கு நினைவிருக்குமா. மாடு தன் எஜமானனையும் கழுதை தன் ஆண்டவரின் முன்னனையையும் அறியும்.என் ஜனங்களோ அறிவில்லாமலும், உணர்வில்லாமலும் இருக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்கிறார் என்றான். எனக்கு கற்பூரமாகிய கர்த்தரின் வாசனை தெரியும், உங்களுக்கு தெரியுமா?
கழுதைதானே என்று என்னை அற்பமாய் எண்ண வேண்டாம். நானும் வேதத்தில் தேவனுடைய சித்தத்தை செய்து, அவரை மகிமை படுத்தினேன். தாவீது சவுலை சந்திக்க போன போது வெகுமதியான பொருட்களை சுமந்து சென்றேன். சிம்சோன் என்னுடைய தாடை எலும்புகளினால் ஆயிரம் பேரை கொள்ள நான் அவனுக்கு உதவி செய்தேன். காலேப்பின் மகள் அக்சாள் திருமணம் ஆனா போது அவளை சுமந்து சென்றவன் நான் .
இப்படி நான் வேதத்தில் எனது கடமைகளை செய்து முடித்திருக்கிறேன். நீங்களும் உங்களுக்குரிய தேவசித்தத்தை நிறைவேற்றி தேவனை மகிமை படுத்துங்கள்.
நன்றி ....
No comments:
Post a Comment