Pages

Monday, 7 January 2013

God is Calling You உன்னை அழைக்கிறார்

அருமையானவர்களே பரத்திலிருந்து நமக்கு இளைப்பாறுதல் வேண்டும். நாம் நமது பாரத்தை ஒருநாளும் சுமக்கக் கூடாது. பிசாசு யார் மூலமாகிலும் நம்மைப் பாரப்படுத்துவான். தூரத்திலிருந்து வரும் கடிதத்தின் மூலமாவது, வார்த்தையின் மூலமாவது நம்மைப் பாரப்படுத்துவான். அந்த நேரத்திலே நமது பாரத்தை மனப்பூர்வமாய் ஆண்டவரிடத்தில் ஒப்படைக்க வேண்டும். இதுவரையிலும் இயேசுவை பாரம் சுமக்கிற ஒரு அருமையான தேவனாய் ஏற்றுக் கொள்ளாத பிள்ளைகள் இருக்கிறீர்கள் என்றால், நீங்கள் உங்கள் வாழ்க்கையை ஆண்டவருடைய கரத்தில் ஒப்படைத்து; "இயேசப்பா இன்றைக்கு நான் உம்மிடத்திலே வருகிறேன்.

எத்தனை காலமாய் என்னுடைய பாரங்களை நான் தனிமையாய் சுமந்து விட்டேன். வெறுமையாய் என்னுடைய இருதயம் பெலவீனமுள்ளதாய் மாறிவிட்டதே " என்று சொல்லுங்கள். பலருக்கு பயங்கரமான இருதய பெலவீனத்தினால் குடல் புண்கள் ஏற்படுகிறது. பாரங்களைச் சுமந்து தாங்க முடியாதபடியால் மகா பயங்கரமான வியாதிகளை தனக்கென்று சம்பாதித்துக் கொள்ளுகிறார்கள். ஆனால் ஆண்டவருடைய சந்நிதானத்திலே பாரத்தை வைக்கின்ற தேவனுடைய ஜனத்திற்கு, அற்புதமான கிரியையை அவர் செய்து கொண்டே இருக்கிறார். 
மாற்கு:6:31-ம் வசனத்தில், இயேசு அவர்களை நோக்கி: வனாந்திரமான ஓரிடத்தில் தனித்து சற்று இளைப்பாறும்படி போவோம் வாருங்கள்" என்று அழைத்தார். வாருங்கள் என்று ஆண்டவர் 2-வது தடவை அழைக்கிற ஒரு அழைப்பின் சத்தத்தை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். பாரத்தை ஆண்டவரிடம் ஒப்படைத்த மக்களைப் பார்த்து வாருங்கள் நாமெல்லாம் ஒன்றாய்போய், ஒரு வனாந்திரமான இடத்திலே தனித்து சற்றே இளைப்பாறுவோம் என்றார். ஆண்டவருடைய அன்பைப் பாருங்கள். நம்பி வந்த மக்களின் சுற்றும் சூழ்நிளைகள், அநேக நெருக்கங்கள் அவர்களை வேதனைப்படுத்திக் கொண்டே இருக்கின்றது. ஆகையால் நீயும் நானும் தனியாகக் கொஞ்ச நேரம் வனாந்தரமான இடத்திற்குப் போகலாமா? ஒருவரும் இல்லாத இடத்திற்கு போகலாமா? அங்கே போய் கொஞ்ச நேரம் இளைப்பாறிக் கொண்டிருக்கலாமா என்று நம்மை அழைக்கிறார். இது பரம இரகசியம். அநேக மக்களுக்கு இந்த இரகசியம் தெரிவதில்லை. உலக மனுஷர் அநேகர் வேதத்தை கற்றிருக்கிறார்கள். அவர்களுக்கென்று ஒரு விடுமுறை நாளை வைத்திருக்கிறார்கள். அந்த நாளிலே யார் வந்தாலும் எந்த பெரிய ஆள் வந்தாலும் சரி அந்த நாள் விடுமுறை நாள்தான். வெளிநாட்டிலுள்ள ஊழியர்கள் கூட திங்கட்கிழமை தங்களுக்கு விடுமுறை என்று வைத்துக் கொண்டார்களானால், எந்தப்பெரிய பிரச்சனையானாலும் யார் மரித்தாலும் அவர்கள் தொலைபேசி தொடர்பு கூட இல்லாத ஒரு இடத்திற்கு போய்விடுகிறார்கள். அன்றைக்கு ஆண்டவரோடு தனிமையாக இருக்கிறார்கள். பாஸ்டர் போல்யோங்கி வாரத்தில் ஒரு விடுமுறை நாள் வைத்திருக்கிறார். அன்றைக்கு அவரை ஒருவராலும் பார்க்க முடியாது. எங்கேயோ தனித்து ஆண்டவரோடு இளைப்பாரிக்கொண்டே இருக்கிறார். 

தனித்துப் போவோம் வாருங்கள் என்றால் அர்த்தம் என்ன? நீ எப்பொழுது பார்த்தாலும் இந்த உலகத்தை நினைத்துக் கொண்டே வாழ்கிறாய். நாலு பேரோடு சேர்ந்து வாழ்கிற ஒரு வாழ்க்கையிலே பழகிப்போனாய். என்னுடைய பிள்ளை என்னோடு இருக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். காலையிலே, நாடு இரவினிலே எழும்பி ஆண்டவரோடு தனிமையாக இருந்து; அப்பா நீர் என்னைத் தொடும் ஆண்டவரே; நீர் என்னை அணைத்துக்கொள்ளும் ஆண்டவரே; நீர் என்னை ஆசிர்வதியும்; உம்முடைய அன்பிலே நீர் என்னை வைத்துக்கொள்ளும் ஆண்டவரே; உம்மையும் என்னையும் தவிர வேறொருவரும் இந்த நேரத்தில் குறுக்கிடவே வேண்டாம் என்று கூறி ஆண்டவரோடு இணைந்து வாழ வேண்டும். ஆண்டவரோடு தனித்து வாழ்கிற சமயத்தை நீங்கள் எடுக்காவிட்டால் உங்களுடைய வாழ்க்கை நிச்சயமாக தோல்வியாக முடிந்துவிடும். ஆண்டவர்தான் தம்முடைய பிள்ளைகளைத் தம்முடைய சீஷர்களைத் தமக்கு அன்பானவர்களை வாருங்கள் நாம் தனிமையாகப் போவோம்; தனித்து இளைப்பாறிக் கொண்டிருப்போம் என்று அழைக்கிறார். ஒவ்வொரு தேவ பிள்ளைகளும் ஆண்டவரோடு அநேக நாட்கள் தனிமையாக இளைப்பாறினார்கள். இயேசுகிறிஸ்து தம்முடைய ஊழியத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாக 40 நாள் வனாந்தரத்திலே பிதாவாகிய தெய்வத்தோடு தனிமையாக உபவாசித்துக் கொண்டிருந்தார். 40 நாளாக ஆண்டவரோடு தனித்து இருந்தார். எலியா தீர்க்கதரிசி பராக்கிரமமான காரியங்களைச் செய்து விட்டு கர்மேல் மலையின் கொடுமுடியில் ஏறி ஆண்டவரோடு தனித்து போராடிக்கொண்டே இருந்தார். உன் வாழ்க்கையில் அப்பேர்ப்பட்ட இளைப்பாறுதலின் காலத்திற்காக கர்த்தர் உன்னை இந்த நாளிலே அழைத்துக் கொண்டே இருக்கிறார். எத்தனை பேர் மனுஷரோடு மட்டும் வாழ்க்கையைச் செலவழிக்கிறார்கள். நம்முடைய வாழ்கை வெற்றியாய் மாற வேண்டுமானால் சற்றே இளைப்பாறும்படியாய் இயேசுவோடு பழகுவோம். 

நான்கு பேரோடு சிரித்து வேடிக்கை பேசிப் பழகிப்போன மக்களுடைய வாழ்க்கையை சரிபடுத்தும்படியாக ஆண்டவர் மனிதர்களிடமிருந்து அவர்களைப் பிரிக்கிறார். அதற்காக பலவிதமான தொல்லைகளை அனுமதிக்கிறார். எனக்கு புறாவைப் போல் சிறகுகள் இருந்தால் நான் தனித்து வனாந்தரத்திலே போய் இளைப்பாரிக்கொண்டே இருப்பேனே என்று சொல்கிறது. இந்த ஏக்கம் எல்லாருடைய உள்ளத்திலும் உண்டாகும் என்பதை அறிந்த கர்த்தர், அன்போடு இந்த நாளிலே உன்னை அழைக்கிறார். வா மகனே ! வா மகளே ! என்னிடத்திலே வா எல்லாரும் ஒன்றாய்ப் போகலாமா? என்று அழைக்கிறார். நாம் ஆண்டவரோடு தனித்து இருக்கும் போது, உலகத்தையே மறந்து விடுவோம். எத்தனையோ நெருக்கங்கள் இருந்தாலும், அந்த நெருக்கங்கள் மத்தியிலே ஆண்டவருடைய சந்நிதானத்திலே அமைதலாய் இருந்து, அப்பாவுடைய பாதத்திலே படுத்துக் கிடக்கிற பாக்கியத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். எனக்கு அந்த நேரத்தைப் போல் விஷேசமான நேரம், மகிமையான நேரம் ஒன்றுமே இல்லை. நாம் தனிமையாக இருக்கும் பொழுது நம்முடைய உள்ளம் தேற்றப்படும். நம்முடைய வாழ்க்கையிலே புதுப்பெலன் உண்டாகின்றது. நீங்கள் அதிகமாய் கர்த்தரை நேசிக்கிறீர்கள் உண்மை தான். அதிகமாய் ஆண்டவரிடத்திலே ஜெபம் பண்ணுகிறீர்கள், ஆனாலும் தனிமையாய் ஆண்டவரும் நீங்களும் மாத்திரம், அப்பாவோடு பேசும் நேரம் ஆத்துமாவுக்கும், சரீரத்திற்கும், சொல்லமுடியாத இளைப்பாறுதலைத் தரும். 
மாற்கு:4:35; சாயங்காலத்தில் அவர் அவர்களை நோக்கி அக்கரைக்கு போவோம் வாருங்கள் என்றார். முதலாவது அழைப்பு வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களுக்கு கர்த்தர் இளைப்பாறுதலை தருகிறார். இரண்டாவது அழைப்பு, இயேசுவும் நாமும் தனிமையாய் இருப்பதற்காக அவர் அழைக்கிறார். 3-வது அழைப்பு அக்கரைக்கு போவதற்கான அழைப்பு. ஆண்டவர் படகில் ஓய்வெடுத்தார். சீஷர்கள் யாத்திரை செய்தார்கள். கடலிலே புயல்; கப்பலிலே பெரிய கொந்தளிப்பு; சீஷர்கள் பயந்து போனார்கள். ஆண்டவரே உமக்கு கவலையில்லையா? நாங்கள் அமிழ்ந்து போகிறோமே; நாங்கள் மடிந்து போகிறோமே என்று ஆண்டவரை எழுப்பினார்கள். ஏன் அவர்களுக்கு விசுவாசம் இல்லாமல் போயிற்று? இயேசு அல்லவா அவர்களை அழைத்தார்? புயலோ கொந்தளிப்போ எது ஏற்பட்டாலும் ஏன் கவலைப்பட வேண்டும். அழைத்தவர் கொண்டுபோய்ச் சேர்ப்பார் அல்லவா? காற்றையும் கடலையும் அதட்டினார். நன்மைகள் உண்டாயின. கப்பல் அக்கறையை நோக்கிப் போனது, அக்கரை போய்ச் சேர்ந்தது. 

அருமையான கர்த்தருடைய பிள்ளையே இந்த உலகம் நிலையில்லாதது. எத்தனையோ விசுவாசிகள் எத்தனை பெரியவர்கள் உலக யாத்திரையை முடித்துவிட்டார்கள். இந்த உலகம் கொந்தளிப்பும் பிரச்சனைகளும் நிறைந்தது. இங்கே அமைதல் இல்லை. ஆகையால் தான் ஆண்டவர் தம்மை நேசிக்கிற பிள்ளைகளை அக்கரை நாட்டுக்காக ஆசையோடு அழைக்கிறார். எவ்வளவு அற்புதமான அழைப்பு என்று யோசித்துப் பாருங்கள். சிலர் ஆண்டவருடைய சத்தத்தை கேட்டு படகிலே ஏறினார்கள். தங்கள் வாழ்க்கையிலே அடிக்கிற புயலைப் பார்த்து அவர்கள் மிகவும் கவலைப் பட்டு கலங்குகிறார்கள். சிலரிடத்திலே கேட்டால் அக்கரைக்கு நான் புறப்பட்டது மெய்தான். ஆனால் அந்தக் கரையிலே போய்ச் சேர்வேனோ என எனக்குப் பயமாயிருக்கிறது என்று சொல்கிறார்கள். 
1தெசலோனிக்கேயர் 5:24-ல் வாசிக்கிறோம், அழைக்கிறவர் உண்மை யுள்ளவர்; அவர் அப்படியே செய்வார். ஆண்டவர் இயேசு இந்த நாளில் உன்னை அழைத்துக்கொண்டே இருக்கிறார். எதற்காக அழைக்கிறார் தெரியுமா? இந்தக் கரையிலே அதாவது பூமியிலே இருக்கிற நாட்களில் ஆண்டவருடைய அழைப்பின் சத்தத்தைக் கேட்டு முழு வாழ்க்கையும் ஆண்டவருடைய கையிலே ஒப்புவிக்கும் பொழுது, அவர் அக்கரைக்கு நம்மைக் கொண்டு செல்வார். அக்கரைக்கு போகவேண்டுமானால் முதலாவது அவருடைய படகிலே நாம் ஏற வேண்டும். அநேக படகுகள் புறப்பட்டன. ஆனால் இயேசு ஏறியிருந்த படகு மட்டும் போய்ச் சேர்ந்தது. சொந்தப்படகிலே அநேகர் போகும்படியாக பிரயாசப்படுகிறார்கள். ஜெபம் பண்ணுகிறார்கள். ஒழுங்காகப் போகிறார்கள். ஒழுங்காக காணிக்கை கொடுக்கிறார்கள். ஆண்டவருடைய படகை விட்டுவிட்டு வேறு எந்தப் படகில் ஏறினாலும் பயனில்லை. 

அந்தக்கரையிலே கொண்டு போய்ச் சேர்க்கப் போகிறேன் என்கிறார். ஆனால் நாமோ ஐயா அந்தக்கரையிலே வருகிறது சந்தோஷம். ஆனால் என்னுடைய படகிலே தான் வரலாம் என்று நினைக்கிறேன் என்று சொல்கிறோம். ஆண்டவரோ இது முடியவே முடியாது. என்னுடைய படகிலே தான் வர வேண்டும் என்று சொல்கிறார். அவருடைய படகிலே போனால் தான் நமக்கு அந்தக் கரையிலே போய்ச் சேர முடியும். 
இன்னும் ஒரு சின்ன சம்பவத்தைக் கூட நான் உங்களுக்கு நினைப்பூட்டி இந்தச் செய்தியை நான் முடிக்கும்படி விரும்புகிறேன். பெரிய கப்பல்கள் கடலிலே போகின்றன. உங்களுக்குத் தெரியும். எத்தனையோ லட்சம் டன் எடை உள்ள கப்பல். பெரிய அந்தக் கப்பலுக்குள் பந்தடிக்கும் களம் (Foot Ball Court) இருக்கிறது. விமானம் தாங்கி கப்பல் எல்லாம் கடலுக்குள் செல்கிறது. ஆனால் அது நாடின துறைமுகத்திலே வந்து இளைப்பாற வேண்டுமானால், ஒரு பைலட் கப்பலோடு இந்தக் கப்பல் இணைக்கப்பட வேண்டும். அப்பொழுது தான் நாடின துறைமுகத்த்திலே வந்து சேரும். இன்று எத்தனையோ மக்கள் தங்களுடைய ஞானத்தை நம்பி அக்கரை சேர்ந்து விடலாம் என்று முயற்சி எடுக்கிறார்கள். தங்களுடைய ஜெபத்தையும், பக்தியையும், பரிசுத்தத்தையும் நம்பி நாங்களும் வந்து சேர்ந்து விடுவோம் என்று சொல்கிறார்கள். ஆனால் போய்ச் சேர முடியாது. சகோதரனே, சகோதரியே வந்து சேர முடியாது. காரணம் என்ன தெரியுமா? கர்த்தர் தம்முடைய படகிலே ஏற்றி உங்களை அக்கரையிலே கொண்டு போய்ச் சேர்ப்பேன் என்று வாக்களித்திருக்கிறார். அந்தப்படகிலே ஏறிச்சென்றோமானால் காற்று பலமாய் அடித்தாலும், கடல் கொந்தளித்தாலும், நீ கவலைப் பட வேண்டியதில்லை. புயல் எழும்பி வரட்டும், அலை மோதி அடிக்கட்டும் நீ கவலைப்பட வேண்டியதில்லை. கப்பல் நடுக்கடலிலே மூழ்கிப் போகலாம், எந்தச் சூழ்நிலையும் உருவாகலாம். அழைத்து அக்கரைக்கு கொண்டு போவேன் என்று சொன்ன தேவன், நிச்சயமாக அக்கரையிலே கொண்டுபோய் சேர்ப்பார். ஆண்டவருடைய படகில் ஏற வேண்டுமானால், உன் வாழ்கையை முற்றிலுமாய் அவருக்கு ஒப்புவிக்க வேண்டும். உன்னுடைய சொந்த விருப்பங்களை மறக்க வேண்டும். அவர் சொல்கிற சாத்தியங்களுக்கு கீழ்படிய வேண்டும். அப்பொழுது ஆண்டவர் உன்மேல் தமது கண்களை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லி, நீ நடக்க வேண்டிய வழியிலே உன்னை அழகாக நடத்திக் கொண்டே போவார். ஆனால் சிலர் கீழ்படியாத மாடைப்போல ஆண்டவருக்கு விரோதமாய் எழும்புகிறார்கள். ஆண்டவரே உம்முடைய பாதை எனக்கு வேண்டாம். நான் விரும்புகிற பாதையிலே நடக்க விரும்புகிறேன் என்று சொல்கிறார்கள். ஆகையால் ஆண்டவருடைய ஆசிர்வாதம் அவர்களுக்கு வருவதில்லை. நீங்கள் பவுல் சொன்னதுபோல ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டாரே. அதுபோல நாம் ஆண்டவருடைய பாதையிலே முன்னேறிப்போகும் போது காடானாலும், மேடானாலும், புல்லானாலும், கல்லானாலும், கர்த்தர் மிக அழகாக, அற்புதமாக, நம்மை நடத்திக் கொண்டு போவார். வாழ்க்கை அற்புதமாக இருக்கும். 

ஆயிரம் போராட்டத்தின் நடுவிலே அருமையான ஆண்டவருடைய இன்பமான சத்தத்தை நீ கேட்பாய். எத்தனை எத்தனையோ பரிசுத்தவான்கள் ஆண்டவரை நம்பினார்கள். நம்பின அத்தனை பேரும் கர்த்தருடைய விசேஷமான கிருபையை கண்டு கொண்டார்கள். அவர்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். ஆகையால் போராட்டமோ சோதனையோ பிரச்சனையோ அலைகளோ ஏற்பட்டாலும் அவைகளின் நடுவில் நம்முடைய கர்த்தர் உண்டு. 

டைட்டானிக் என்று சொல்லுகிற கப்பல் சுமார் 85 வருடங்களுக்கு முன்னே அட்லாண்டிக் சமுத்திரத்திலே 4 மைல் ஆழமுள்ள பகுதியில் பனிக்கட்டி நிறைந்த தண்ணீர் வழியாக இரவு நேரத்தில் ஓடிக் கொண்டிருந்தது. பிரிட்ஜ்-லே இருக்கிற ஒருவன் கப்டனிடத்திலே ஒரு பனிக்கட்டி மலை வேகத்தில் வருகிறது போல் எனக்குத் தோன்றுகிறது என்று கூறினான். உடனே மாலுமி எஞ்சினை வேகமாக ஓட்டினால் பனிக்கட்டி வருகிறதற்குள்ளாக கொண்டு போய்விடலாம் என்று கூறினார். அந்நேரத்தில் முதல் அறையிலிருந்தவர் ஏழு எந்திரங்களில் உள்ள குழாய்கள் வேலை செய்துகொண்டே இருக்கிறது. கப்பலின் வெளிப்பகுதி பயங்கரமான இரும்பு பாளத்தினாலும் உள்பகுதி மரத்தினாலும் செய்யப்பட்ட ஒரு பயங்கரமான ராட்சத கப்பல் அல்லவா இது. கடலில் மூழ்காது என்று தொலைபேசியில் பேசி முடிப்பதற்குள் விஷயம் முடிந்துவிட்டது. முக்கியமான ஒருவர் நமது கடலின் வெளிப்பக்கத்திலே யாரோ விரல் வைத்து தடவுகிறது போல சத்தம் கேட்கிறது என்று சொன்னார். கொஞ்சம் நேரத்திற்குள் கரை ஏறுகிறவர்கள் எல்லாம் தப்பி கரை ஏறலாம் என்று கூறினார்கள். கப்பல் அப்படியே நின்றது. மரணத்திற்கான கடைசிப்பாட்டை பாடினார்கள். டைட்டானிக் கப்பலும் அமிழ்ந்து போனது. கப்பலில் இருந்தவர்களும் அமிழ்ந்து போனார்கள். 1500 பேர் ஒரே நாளில் மரித்து போனார்கள். 
அருமையான கர்த்தருடைய பிள்ளையே மனுஷன் மரித்துப் போனதை நம்புகிறான். இந்தக் கப்பல் மூழ்காது என்று உத்தரவாதம் பண்ணினார்கள். ஆனால் கப்பல் மூழ்கினது. கப்பல் மாலுமியும் பொறியியல் அறிஞரும் மரித்தார்கள். நமக்கொரு மாலுமி உண்டு. அவர் தவறு செய்கிறதில்லை. அவர்தான் அக்கரைக்கு போவோம் வாருங்கள் உங்களுக்காக மகிமையிலே ஒரு வீட்டை ஆயத்தம் பண்ணி வைத்திருக்கிறேன், என்னுடைய கப்பலிலே வா என்று அழைக்கிறார். நாம் அவருடைய கரத்தில் இளைப்பாறிகொண்டிருப்போம். அவைகள் ஒன்றும் நம்முடைய ஆண்டவருக்கு மிஞ்சினவைகள் அல்ல. நாம் தைரியத்தோடு ஆண்டவருடைய அவர் அழைத்த இடத்திற்கு செல்வோம். கர்த்தர் நம்மை ஆசிர்வதிப்பார். ஆமென்.

No comments:

Post a Comment