Pages

Sunday, 13 January 2013

Evangelist சுவிசேஷகன்

ஏசாயா:52:7-ல் சமாதானத்தைக் கூறி நற்காரியங்களை சுவிசேஷமாய் அறிவித்து இரட்சிப்பை பிரசித்தப்படுத்தி உன் தேவன் ராஜரீகம் பண்ணுகிறார் என்று சீயோனுக்கு சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின் மேல் எவ்வளவு அழகாயிருக்கிறது.

ஏசாயா தீர்க்கதரிசி 52,53 அதிகாரங்கள், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றிய தீர்காதரிசன அதிகாரங்கள் ஆகும். ஆனால் இங்கே ஒரு சுவிசேஷகனைப்பற்றி சொல்லியிருக்கிறது. அந்தச் சுவிசேஷகனுடைய பாதங்கள் மலையின் மேல் அல்லது மலைகளின் மேல் எத்தனை அழகாயிருக்கிறது. யார் இந்த சுவிசேஷகன்? சுவிசேஷம் என்றால் என்ன? சுவிசேஷம் என்று சொன்னால் நல்ல செய்தி. நல்ல செய்தியை சொல்லுகிற ஒருவர் சமாதானத்தைக் கூறுகிறார். அதோடு உன் தேவன் ராஜரீகம் பண்ணுகிறார் என்று சீயோனுக்கு அவர் சொல்லுகிறார். ஏற்கனவே அவர் சொல்லப் போகிறது ஒரு நல்ல செய்தி, அதோடுகூட நமக்குச் சமாதானத்தைக் கூறி அறிவிக்கிறார். நம்மை தைரியப்படுத்தும்படியாய் " உன் தேவன் ராஜரீகம் பண்ணுகிறார் என்ற நல்ல செய்தியை சொல்கிறார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பாதங்கள் மலையின் மேல் அழகாயிருக்கிறது. 
முதலாவது அவருடைய நடை அழகாயிருக்கிறது. அவர் நடந்து வருகிறதை கண்டு யோவான் ஸ்நானகன் இவர் இயேசு என்று சொன்னார். அவருடைய நடை அத்தனை நிதானம். அத்தனை அழகு. சிலர் குந்திக்குந்தியும், சிலர் சாதாரணமாக நடந்தாலும், ஓடியும், சிலர் அன்ன நடையும் நடப்பார்கள். ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அழகான தேவ நடை நடந்தார். அவருடைய பாதங்கள் நன்மை செய்ய சுற்றி நடந்தது. அவர் எங்கே போனாலும் அங்கெல்லாம் நன்மையே நடந்தது. நமக்காக கல்வாரி சிலுவையிலே அவருடைய பாதங்களில் ஆணிகள் கடாவப்பட்ட பொழுது நமக்கு மிகவும் அழகாக மாறிவிட்டது. 

ஒரு சம்பவத்தை ஞாபகப்பாடுத்துகிறேன். ஒரு அழகான தாயாரும் ஒரு அன்பான மகனும் இருந்தார்கள். மகனுக்கு அம்மாவின்மேல் மிகமிக அன்பு. ஆனால். அந்த அம்மா தன்னுடைய வலது கரத்தை நீட்டி ஏதாவது வேலை செய்யும் பொழுது, அவனுடைய உள்ளத்தில் ஒரு பெரிய வேதனையாக இருக்கும். அழகான அம்மாவுடைய கை இவ்வளவு அவலட்சணமாயத் தெரிகிறதே என்பது தான். அம்மாவை வருத்தப்படுத்த விரும்பாத இந்த அருமையான மகன் ஒரு நாளும் அத்தைக் குறித்து கேட்கவே இல்லை. ஆனால் ஒருநாள் அவனால் அடக்கிக்கொள்ள முடியாமல், நீங்கள் எவ்வளவு அழகாயிருக்கிறீர்கள், ஆனால் உங்கள் கை ஏன் இவ்வளவு அவலட்சண மாயிருக்கிறது? என்று துக்கத்தோடு கேட்டான். அப்பொழுது அந்த அம்மா "என் மகனே அது ஒரு பெரிய சரித்திரம். ஒரு நாள் நம்முடைய வீடு தீப்பிடித்தது. அந்த தீயிலே நீ அகப்பட்டுக் கொண்டாய். எல்லாவற்றையும் காப்பாற்றினார்கள். நீ சின்னஞ்சிறு குழந்தையாயிருந்தாய். உன்னை காப்பாற்றும்படியாய் நான் எவ்வளவோ சத்தம் போட்டேன். ஒருவரும் காப்பாற்றவில்லை. ஆகையால் நான் துணிந்து அந்த தீயிலே குதித்து உன்னை காபாற்றினேன். அப்பொழுது எனது வலது கை வெந்துபோயிற்று. ஆகையால் தான் என்னுடைய வலது கை அருவருப்பாக இருக்கிறது மகனே" என்று சொன்னார்கள். அந்த மகன் தன்னுடைய தாயாருடைய வலது கையை பிடித்து வைத்துக்கொண்டு அழுது "அம்மா உங்கள் சரீரம் மிகவும் அழகானது; உங்கள் வலது கையின் அழகை நான் மறக்கவே மாட்டேன் என்று சொன்னான். 

அதேபோல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கால்கள், அவருடைய பாதங்கள் மிகவும் அழகானவை. மிக அழகாய் நடந்தவை, நன்மை செய்யும் படியாய் தேசம் முழுவதும் சுற்றி நடந்த கால்கள். அவர் கானா ஊர் கலியாண வீட்டிலே பிரவேசித்தார். அங்கே உள்ள துக்கம் மாறி சந்தோஷம் உண்டாயிற்று. கதரேனருடைய ஊரிலே ஒருநாள் கர்த்தர் கடந்து போனார். அந்த ஊர் முழுவதற்கும் துக்கமாய் இருந்த லேகியோன் பிசாசு பிடித்தவன், தெளிந்த புத்தியுள்ளவனாகி ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினுடைய பாதத்திலே, வஸ்திரத்தை தரித்துக் கொண்டு அமைதலாய் உட்கார்ந்திருந்தான். அவர் சென்ற இடமெல்லாம் ஆசிர்வாதம். அவர் சென்ற நாடெல்லாம் ஆசிர்வாதம். மனுஷரைப் பிடித்து சாப்பிடுகிற நரமாம்ச பட்சிணிகள் நிறைந்த ஆபிரிக்கா தேசத்திலே என் அருமையான ஆண்டவருடைய பாதங்கள் பட்டன. அந்த இடம் ஆசிர்வாதமாக மாறிவிட்டது. பன்றிகளை மேய்த்துக்கொண்டிருந்த வெள்ளைக்காரருடைய நாட்டிலே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினுடைய பாதங்கள் பட்டன. அந்த நாடு இன்று நவ நாகரீகமான நாடாக மாறிப் போயிற்று. கர்த்தர் நன்மை செய்கிறவராய் அகிலாண்டம் முழுவதும் சுற்றி நடந்தார். ஆனால் எனக்காக உங்களுக்காக சிலுவையில் தம்முடைய பாதங்களை காயப்பட ஒப்புக்கொடுத்தார். அந்தக் கால்கள் மிகவும் அழகுள்ளதாய் மாறிவிட்டன. இயேசுவை விசுவாசிக்கிற ஒவ்வொரு மக்களுக்கும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பாதங்கள் மிகவும் அழகுள்ளதாய் மாறிவிட்டன. அந்தப் பாதங்களை நமக்கு அப்படியே பற்றிப் பிடித்துக் கொண்டு இடைவிடாமல் முத்தம் செய்து கொண்டு இருக்கலாமா? என்று நமக்கு 

தோன்றுகின்றது. என் வாழ்க்கையிலே எனக்கு மிக மிக இன்பமான நேரம் என் ஆவியிலே ஆண்டவருடைய பாதத்தை பற்றி பிடித்துக் கொண்டு என் முகத்தை அவருடைய இரண்டு பாதங்களுக்கு இடையே வைத்து அப்படியே அமர்ந்து கிடக்கின்ற நேரம். அதைப்போல ஆறுதலும், சமாதானமுள்ள நேரத்தை என் வாழ்க்கையிலே நான் பார்த்ததேயில்லை. சோர்ந்து, தளர்ந்து போன நேரங்களிலே ஆண்டவருடைய இன்பமான பாதங்கள் எனக்குச் சொல்ல முடியாத ஆறுதலைத் தந்தது, ஆனால் ஆறுதலைத் தந்தது மாதிரமல்ல கர்த்தருடைய நாமத்தின் மகிமைக்காய் நான் சொல்கிறேன்; என் முகத்தை அவருடைய காயப்பட்ட பாதங்களுக்கு புதைத்துப் படுத்துக் கிடக்கிற நேரத்திலே என் அருமையான ஆண்டவருடைய அழகான கைகள் என் முதுகிலே வந்து அமருகிற மகிமையான காட்சியை நான் பார்த்திருக்கிறேன். அவருடைய கைகள் என் முதுகின் மேல் வைக்கப்படுகிற நாளெல்லாம் நான் மிக மிக ஆசிர்வதிக்கப்பட்டவனாகவும், மிகவும் பயனுள்ள பாத்திரமாகவும் நான் மாறிக்கொண்டேயிருப்பதை என் வாழ்க்கையிலே உணர்ந்து சந்தோஷப்படுகிறேன். அதுதான் ஆண்டவருடைய அழகான பாதங்கள் உயர்ந்த மலைகளின் மேல் வருகிறது. சூலமித்தி உன்னதப்பாட்டில் குதித்தும் மேடுகள் மேல் துள்ளியும் வருகிறார் என்று சொல்லித் தன்னுடைய நேசரை வர்ணிக்கிறாள். அந்த அருமையான ஆண்டவர் 

நற்காரியங்களை அதாவது சமாதானத்தை கூறுகிறார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் மனிதன் வரும் பொழுது, அவனுக்கு முதலாவது கிடைக்கிறது சமாதானம். ஆண்டவராகிய இயேசு தம்முடைய சீஷர்களை இரண்டு, இரண்டு பேராக ஊழியம் செய்யும் படி அனுப்பும்பொழுது "நீங்கள் ஒரு வீட்டிலே பிரவேசிக்கும் பொழுது அந்த வீட்டுக்கு சமாதானம் என்று சொல்லுங்கள்" அந்த வீட்டிலே சமாதான பாத்திரன் இருந்தால் நீங்கள் அங்கே சொன்ன சமாதானம் அவர்களுக்கு உண்டாகும் என்றார். உயிர்த்தெழுந்த இயேசு சீஷர்களின் நடுவிலே கடந்து வந்து உங்களுக்கு சமாதானம் என்று கூறினார். அருமையான சகோதரியே உன் வாழ்க்கை கொந்தளிப்பு நிரந்த வாழ்க்கையாக இருக்கிறதா? ஒருவேளை இயேசுவை நீ ஏற்றுக்கொண்டும் கூட ஆண்டவருடைய பிள்ளை என்று பேர்பெற்றும் கூட உன் வாழ்கை அலைகளுள்ளதாயிருக்கிறதானால், இந்த நேரத்திலே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் உனக்கு நேராகக் கடந்து வந்து கொண்டேயிருக்கிறது. ஆண்டவர் இயேசு சமாதானப்பாத்திரன் இருந்தால் நீங்கள் கூறின சமாதானம் அவர்களுக்குப் போகும்; இல்லாவிட்டால் திரும்ப உங்களிடத்தில் வரும்" என்று சொன்னார். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினிடத்திலே நன்மை பெற்றுகொள்ளவேண்டுமானால், நாம் நம்முடைய தேவைகளை அவருக்கு முன்பாக வைக்க வேண்டும். நம்முடைய தேவை என்ன என்பதை அவருக்கு வெளிபடுத்தினா லொழிய, நமக்கு நன்மை செய்யவே முடியாது. ஆதாம் அத்தியிலையினாலே தன்னை மறைத்துக் கொண்டது மாத்திரமல்ல, ஒரு மரத்திற்குப் பின்னாலே தன்னை மறைத்துக் கொண்டார். அத்தியிலையினாலே தன் நிர்வாணத்தை மூடினான். ஆதி மனிதன் முதல் கடைசி கால மனிதன் வரையிலும் மதிகெட்டவர்களாகவே இருக்கிறார்கள். அத்தியிலை ஆதாமுடைய நிர்வாணத்தை மூட முடியுமா? ஒரு இலை ஒரு மனிதனுடைய நிர்வாணத்தை மூட முடியுமா? வெயில் அடிக்கும் பொழுது இலைகள் காய்ந்து சுருண்டு போகுமே. தன்னை கர்த்தருடைய கண்களுக்கு முன்பாக மறைத்துக்கொள்ள முடியுமோ? சகேயு ஒரு மரத்தின் மேல் ஏறினான். கடைசி நாட்களிலே மனிதன் மார்க்கங்கள் மேலும் கொள்கைகளின் மேலும் ஏறியிருந்து கொண்டு தன்னுடைய அவல நிலையை மறைக்கலாம் என்று பார்க்கிறான். எங்கே மறைக்க முடியும்? ஜீவனுள்ள தேவனுடைய கண்களுக்கு முன்பாக ஒருவரும் மறைந்து இருக்கவே முடியாது. 

ஒரு சகோதரியினுடைய சாட்சியை நான் படித்தேன். ஒரு ஆசிரியையாக பணியாற்றிய சகோதரி தன்னுடைய வகுப்பிலே நன்றாகப் பாடம் நடத்துவார்கள். ஞாயிறு பள்ளியிலும் ஒரு வகுப்பை நடத்தும் படி கூறினார்கள். அந்த சகோதரி எனக்குப் பயமாக இருக்கிறது , நான் நடுங்கிக் கொண்டு இருக்கிறேன். இப்பொழுது ஒரு சம்பளத்திற்கு வேலை செய்கிறேன். ஆனால என்னால் ஒருவருக்கும் முன்பும் நிற்க முடியாது என்று சொன்னார்களாம். ஏன் இவ்வளவு நடுங்குகிறாய்? என்று கேட்டபொழுது தன் இருதயத்தை திறந்து கூறியது "நான் சின்னப்பிள்ளையாய் இருந்த நாள் முதல் என்னை ஒருவரும் தைரியப்படுத்தினதேயில்லை. நான் செய்த எந்த வேலையைப் பார்த்தாகிலும் நீ நன்றாய் செய்தாய் மகளே என்று என் அப்பா கூட சொன்னதில்லை. ஒருவருமே உற்சாகப்படுத்தினதில்லை. ஆகையால் நான் கோழையாக வளர்ந்து விட்டேன். இனிமேல் என்னால் ஒன்றும் செய்ய முடியாது "என்றாளாம். 

உங்கள் உள்ளத்திலேயும் ஏதாவது அலைமோதல் இருக்கலாம். நான்கு பேருக்கு முன்னாலே உன்னால் தைரியமாக நிற்க முடியாமல் இருக்கலாம். சோர்வு , களைப்பு உன் வாழ்கையிலே இருக்கலாம் அல்லது யாராவது உன்னை அடித்திருக்கலாம். பெரிய பயம் உன் வாழ்க்கையிலே இருக்கலாம். இன்றைக்கு ஆண்டவர் உன்னுடைய பக்கத்திலே கடந்து வந்திருக்கிறார். தேவ பிரசன்னத்தை நான் பரிபூரணமாய் உணர்ந்து கொண்டு இருக்கிறேன். ஆண்டவருடைய சமூகத்தை ஒருவரும் அலட்சியம் பண்ணிவிடக்கூடாது. எவ்விதமான வீண் சிந்தனையாலும் அலட்சியம் பண்ணக்கூடாது. கர்த்தர் உங்களுடைய ஆத்துமாவிலே ஊழியம் செய்கிற மகிமையான நேரம் இது. உன் வாழ்க்கையிலே வெட்கமோ, பயமோ, தளர்வோ, சோர்வோ இருக்குமானால் உனக்கு ஒரு நல்ல செய்தி, "ஆண்டவர் சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு வருகிறார்"உன் இருதயத்தைத் திறந்து ஆண்டவரோடு பேசு மகளே, பேசு மகனே, உனக்கு சமாதானத்தை தரும்படி நான் வந்திருக்கிறேன். உனக்கு சமாதானத்தை கட்டளையிடும்படியாய் உன்னுடைய வாழ்வின் தாழ்வான நிலைமைகளை மாற்றும்படியாக, உன்னுடைய வாழ்விலிருக்கிற சோர்ந்த நிலைமைகளை மாற்றும்படியாய், உன்னுடைய வாழ்விளிருக்கிற கொந்தளிப்புக்களை எடுத்துப்போடும்படியாக நான் எழுந்து விட்டேன் "என்று தேவ ஆவியானவர் உன்னோடு பேசிக்கொண்டிருக்கிறார். இந்த நேரத்திலே நீ உன்னை ஒப்புக்கொடு. தேவ ஆவியானவர் உங்களோடு பேசிக்கொண்டு இருக்கிற நேரத்திலே உன் இருதயத்தை திறந்துகோடு. 

படகில் சீஷர்கள் இயேசுவை எழுப்பி "ஆண்டவரே மரிக்கப் போகிறோம் உமக்கு கவலையில்லைய"? என்று சொன்னார்களே. உடனே ஆண்டவர் இயேசு எழுந்து விட்டார். என்ன அழகாக நிற்கிறார். வாழ்க்கையிலே அமைதளைக் கட்டளையிடும் காலாகாலமாய் உன் வாழ்க்கையை நாசமாக்கிக் கொண்டிருக்கிற வெட்கத்திலிருந்து உன்னை விடுதலையாக்கும் படியாக முன்னே வரக்கூடாதபடி தடை பண்ணிகொண்டிருக்கிற தடைகளிலிருந்தும், சோர்வின் பள்ளத்தாக்கிலிருந்தும் உன்னை வெளியே கொண்டு வரும்படி ஆண்டவர் உனக்காய் எழும்பி நிற்கிறதை பார், கலிலேயாக்கடலிலே அந்தப் படகில் எழும்பி நின்றவர் உன்னுடைய வாழ்க்கை படகில் எழும்பி நிற்கிறார் என்பதை மறந்து விடாதே. உன்னுடைய வாழ்க்கைப் படகு பலவிதமான சூறாவளிக் காற்றினாலே அலைபட்டுக் கொண்டே இருக்கின்றது. உன்னுடைய ஞானத்தை பயன்படுத்தி எத்தனையோ காரியங்களை நீ செய்து விட்டாய். இன்றைக்கு கர்த்தர் உன் வாழ்கை படகிலே எழும்பி நிற்கிறார். ஆண்டவரை நோக்கிப்பார். சகோதரியே, சகோதரனே ஆண்டவரை நோக்கிப் பார். மனுஷனை நீ நோக்கிப் பார்க்க வேண்டாம். 

ஆண்டவரிடத்திலே உன் பிரச்சனையைச் சொல். ஐயா நாங்கள் மடிந்து போகிறோம். இவ்விதமாய் எங்களால் அநேக நாட்கள் ஓட்டிச்செல்ல முடியாது. என்னுடைய பியாசனத்தினாலே என்னுடைய பிள்ளைகளையோ, குடுமபத்தையோ செம்மைப்படுத்த முடியாது என்று சொல்லுங்கள். அவரை விசுவாசிக்கா விட்டால் பிரயோசனம் ஒன்றுமில்லை. இப்பொழுது நீ விசுவாசித்து ஜெயம் பெற்றுக்கொள். அவர் உன் வாழ்க்கையை செம்மைப்படுத்த போகிறார். இரையாதே அமைதலாயிரு என்ற வார்த்தையை சொல்கிறது நான் அல்ல என் ஆண்டவர் சொல்கிறார். உன் அத்தியிலை உனக்கு வேண்டாம். அது உன்னைக் காப்பாற்ற போவதில்லை. உன் பாவக் கிரியைகள், உன் சிரிப்பு உன்னைக் காப்பாற்றாது சகோதரனே. உன் வேஷங்கள் உன் பாவத்திற்கு வரும் தண்டனையிலிருந்து காப்பாற்ற முடியாது. சமாதானத்தைத் தரும் கர்த்தரிடத்திலே உன் இருதயத்தைத் திருப்பு. உன்னை காப்பாற்றிக் கொள்ளும்படியாய், நீ பெரு முயற்சி எடுக்காதே. நீ அநேக உபாய தந்திரங்களை கையாளுகிறாய். அது உன்னை கடைசி வரையிலும் காப்பாற்றுவது இல்லை. உன்னை காபாற்றுகிறவர் கர்த்தர். உன் கப்பலைக் கரையிலே கொண்டு போய்ச் சேர்க்க அவர் வல்லவர். அவர் உனக்காய் இந்த நேரத்திலே எழுந்தருளியிருக்கிறார். உனக்காய் எழும்பியிருக்கிறார். 

ஒரு நிமிடம் அப்படியே இருக்கிற நிலையிலே கண்களை மூடி ஜெபிப்போம். உனக்கு ஒத்தாசை செய்யும்படியாய் கர்த்தர் விரும்புகிறார். கர்த்தரிடத்திலிருந்து இரக்கத்தை பெற்றுக்கொள். சமாதானம் கூறும் கர்த்தர் உன் முன் நிற்கிறார். நீ அவருக்கு உன்னை ஒப்புவித்து, சமாதானத்தோடே வாழ்கையை நடத்து. கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார். ஆமென்.

தொடரும்......

No comments:

Post a Comment