Pages

Sunday 27 October 2013

ஆலயத்திற்குச் செல்வோம்.


சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம், நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும். 
எபிரேயர் - 10:25.

ஒரு மனிதர் சபைக்கு ஒழுங்காக செல்பவர், ஒரு முறை ஒரு செய்தித்தாளில் எடிட்டர் பக்கத்திற்கு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சபைக்குச் செல்வது பிரயோஜனமில்லை என்றும், தான் கடந்த30 வருடங்களாக சபைக்குச் செல்வதாகவும், அங்கு,
ஏறக்குறைய 3000 போதகங்களைக் கேட்டிருப்பதாகவும், ஆனால் இப்போது, போதகர் செய்த பிரசங்கங்களில் ஒன்றுக் கூட தன் நினைவில் இல்லையென்றும், போதகர் தன் நேரத்தையும், அவருடைய நேரத்தையும் வீணடிப்பதாகவும் எழுதியிருந்தார். மற்றவர்களும் அதில் சேர்ந்து விவாதிக்க ஆரம்பித்தார்கள். இது சில வாரங்களுக்குச் சென்றது. கடைசியில் ஒரு விசுவாசி எழுதினார், “எனக்கு திருமணமாகி 30 வருடங்கள் ஆகிறது. என் மனைவி ஏறக்குறைய 3200 தடவை உணவுகளை சமைத்து தந்திருக்கிறாள். அவள் என்ன சமைத்தாள் என்று கேட்டால் எனக்கு எதுவும் ஞாபகமில்லை, ஆனால் அவைகள் என் உடலுக்கு ஆரோக்கியத்தையும் நான் வேலை செய்வதற்கு எனக்கு சக்தியையும் கொடுத்து வருகின்றன. என் மனைவி சமைத்துக் கொடுத்திருக்கவில்லை என்றால், நான் இந்நேரம் சரீரபிரகாரமாக மரித்திருப்பேன். அதுப் போல நான் ஆலயத்திற்குச் சென்று கர்த்தருடைய வார்த்தைகளை கேட்கவில்லை என்றால் ஆத்தும ரீதியாக எப்போதோ மரித்திருப்பேன். தேவன் எனக்கு கொடுத்த சரீர, ஆத்மீக உணவுகளுக்காக ஸ்தோத்திரம்” என்றார்.

சிலருக்கு ஆலயத்திற்கு செல்வதென்றால் மிகவும் கஷ்டம். ஏனென்றால் அன்று ஒருநாள்தான் படுக்கையிலிருந்து லேட்டாக எழுந்து, ஆற அமர சாப்பிட்டு, ஓய்வெடுக்கலாமே என்ற எண்ணம். தேவனுடைய வீட்டிற்குச்சென்று அங்கு அவருடைய ஆசீர்வாதத்தை பெற்று வரும்போது நம் வாழ்க்கை செழிப்பாக மாறும். கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன் என்று தாவீது ராஜா தான் ஒரு அரசனாயிருந்தாலும் பல அலுவல்கள் இருந்தாலும் ஆலயத்திற்கு செல்லும்போது மிகுந்த மகிழ்ச்சியாயிருந்தார். மத்திய கிழக்கு நாடுகளில் எத்தனை நாடுகளில் சபைக்குச் செல்ல முடியாத தடை! அங்கு ஞாயிற்றுக் கிழமைதான் சபை என்றில்லை, வாரத்தில் எந்த நாளும் சபைக்குச் செல்லலாம், அப்படி தடையில்லாதபோது வேலையினிமித்தமாக போக முடியாத சூழ்நிலை! நம்மில் எத்தனைப் பேருக்கு ஞாயிற்றுக் கிழமை ஓய்வுநாள்! 84 ம் சங்கீதம் முழுவதும் வாசித்துப் பாருங்கள். ஆலயத்திற்கு செல்வதைக் குறித்து அருமையான வார்த்தைகள் எழுதப்பட்டிருக்கினறன. எனக்கு சில நேரங்களில் சபைக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டபோது இந்த அதிகாரத்தை வைத்து கதறி அழுதிருக்கிறேன். கர்த்தர் கிருபையாய் இரங்கி வாரந்தோறும் செல்லும் பாக்கியத்தைக் கொடுத்திருக்கிறார். அப்பாவின் வீட்டிற்கு செல்லும்போது அவர் நம்மை நன்மைகளினால் திருப்தியாக்குகிறார். அவர் செய்த நன்மைகளை எழுதப்போனால் இந்த பக்கம் முழுவதும் போதாது. ஆலயத்திற்கு செல்வதற்கு சோம்பல் படாதீர்கள்! ஆலயத்திற்கு போவோம் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வோம்.

No comments:

Post a Comment