Pages

Thursday 2 January 2014


உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான். – (சங்கீதம் 91:1).

நம் ஒவ்வொருவருக்கும் நம்முடைய நிழல் என்று ஒன்று இருக்கிறது. நாம் நடக்கும்போது நம்முடைய நிழல் நம்மை தொடர்ந்து வருகிறது. பகல் 12 மணிக்கு மாத்திரம் நிழல் தனியாக தெரிவதில்லை. மற்ற நேரங்களில் நிழல் நம்மை தொடர்ந்து வருகிறதை நாம் பார்த்திருக்கிறோம்.
நான் சிறுவயதில் பள்ளிக்கூடம் செல்லும்போது பகலின் வெயிலுக்கு ஒரு அடைக்கலமாக நிழல் எங்காவது கிடைக்குமா என்றுப் பார்த்து ஒதுங்குவது வழக்கம். பெய்யும் மழைக்கு தப்பும்படியாக நிழலை தேடி ஒதுங்குகிறவர்கள் உண்டு. பஸ் வந்து நிற்கும் இடத்திற்கு பயணிகள் நிழற்குடை என்று எழுதியிருப்பார்கள். இப்படி நிழலை தருவதற்கென்று அசோக இராஜா பல நிழல்தரும் மரங்களை நட்டார் என்று சரித்திரத்தில் நாம் வாசித்திருக்கிறோம். அதுப்போல நம்மை காப்பதற்கும் ஒரு நிழல் உண்டு. அது வேறு யாருமல்ல, நம்முடைய சர்வவல்ல தேவனுடைய நிழலே.
யோசுவாவும், காலேபும் மற்ற 10 பேரும் கானானை உளவுப்பார்த்து வர மோசேயினால் அனுப்பப்பட்டார்கள். அவர்கள் திரும்பி வந்தபோது, பத்துப்பேர் ‘நாங்கள் போய்ச் சுற்றிப் பார்த்துவந்த அந்த தேசம் தன் குடிகளைப் பட்சிக்கிற தேசம்; நாங்கள் அதிலே கண்ட ஜனங்கள் எல்லாரும் மிகவும் பெரிய ஆட்கள். அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம். நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம் என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே தாங்கள் சுற்றிப் பார்த்துவந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள்’ (எண்ணாகமம் 13:33-34).
ஆனால் காலேபும் யோசுவாவும், ‘நாங்கள் போய்ச் சுற்றிப்பார்த்து சோதித்த தேசம் மகா நல்ல தேசம். கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார். கர்த்தருக்கு விரோதமாகமாத்திரம் கலகம்பண்ணாதிருங்கள்; அந்த தேசத்தின் ஜனங்களுக்கு நீங்கள் பயப்படவேண்டியதில்லை; அவர்கள் நமக்கு இரையாவார்கள்; அவர்களைக் காத்த நிழல் அவர்களைவிட்டு விலகிப்போயிற்று; கர்த்தர் நம்மோடே இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்படவேண்டியதில்லை என்றார்கள்’ (எண்ணாகமம் 14:7-9). இந்த வசனங்களில் யோசுவாவும் காலேபும் சொல்வதை கவனியுங்கள், கானானியரை காத்த நிழல் அவர்களை விட்டு விலகிப்போயிற்று என்று சொன்னார்கள்.
அந்த புறஜாதியான கானானியரையும் ஒரு நிழல் காத்தது. ஆனால் அது அவர்களை விட்டு விலகிப்போயிற்று. ஏனெனில் சர்வ வல்ல தேவனுக்கு முன்பாக வேறு எந்த நிழலும் நிற்கக்கூட முடியாது. தம் பிள்ளைகள் சுதந்தரிப்பதற்காக தேவன் கொடுத்த தேசத்தை காப்பதற்காக தம்மைத் தவிர வேறு நிழல் இல்லை என்பதை யோசுவாவும் காலேபும் உணர செய்தார். ஆனால் அதை அறியாதவர்களாகிய மற்றப் பத்துப் பேரும் தவறாக துர்ச்செய்தி பரவ செய்து, அதனால் அவர்களில் ஒருவரும் கானான் தேசத்தை சுதந்தரிக்க முடியவில்லை. மட்டுமல்ல, அவர்கள் சொல்வதை கேட்டு செவிக் கொடுத்த இஸ்ரவேலர் ஒருவரும் சுதந்தரிக்கவில்லை. ஆனால் அவர்கள் பிள்ளைகளும், யோசுவாவும், காலேபும் மாத்திரம் சுதந்தரித்தார்கள்.
நாமும் இளைப்பாறும்படியாக ஒரு நிழல் உண்டு. அது சர்வவல்லவரின் நிழல். அந்த நிழலில் நாம் இருக்கும்போது, 91 ம் சங்கீதத்தில் சொல்லப்பட்டிருக்கிற அத்தனை ஆசீர்வாதமும் நம்மை வந்துச் சேரும். நாம் வேறு நிழலை அண்டி வாழ்வோமென்றால் அந்த நிழல் ஒருநாள் நம்மை விட்டு விலகிப் போய் விடும். ஆனால் கர்த்தரின் நிழலோ என்றென்றைக்கும் நம்மை சுற்றி நின்று பாதுகாக்கும். அல்லேலூயா!
சர்வவல்லவரின் நிழலில் தங்கும்போது நமக்கு அடைக்கலம் உண்டு. ‘எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது; விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்’ (சங்கீதம் 57:1) என்று சங்கீதக்காரனைப் போல அவருடைய செட்டைகளின் நிழலிலே நமக்கும் வியாதிகளிலிருந்தும் விக்கினங்களிலிருந்தும் பாதுகாப்பு உண்டு. அவருடைய நிழலைப் பற்றிக் கொள்வோமா? ஆமென் அல்லேலூயா!

No comments:

Post a Comment