Pages

Monday 4 February 2013

Walk Worthy of your Calling அழைப்பிற்கு பாத்திரவானாய் நடந்துகொள்

இந்த வருடத்தினுடைய எங்களுடைய இலக்கு, (Walk worthy of your calling) நாம் அழைக்கப்பட்டஎம்முடைய அழைப்பிற்கு பாத்திரவானாய் நடந்துகொள்வதே ஆகும். எப்பொழுது ஒரு தேவ பிள்ளை ஆண்டவரோடு ஒரு நெருக்கமான உறவைக் கொண்டு அவருடைய பிரசன்னத்தை சுமக்கிற ஒரு பாத்திரமாய் இருக்கிறாரோ, அப்பொழுது தான் அவருடைய வாயிலே இருந்து புறப்படுகிற வார்த்தையிலே வல்லமையிருக்கும். ஊழியங்களிலே வல்லமையிருக்கும். அவர்களுடைய வாழ்க்கை மற்றவர்களுக்கு ஆசிர்வாதமாய் இருக்கும். தேவனுடைய பிரசன்னம் இல்லாத ஒரு மனிதனுடைய வாயிலே இருந்து எவ்வளவு தான் அழகாய் தேவனுடைய வார்த்தையைப் பேசினாலும், அந்த வார்த்தையிலே வல்லமை இருக்காது. ஆகவே பிரியமானவர்களே! இந்த 2013ம் ஆண்டு நாம் யாவரும் தேவன் எங்கள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் வைத்திருக்கிற அழைப்பிற்கு பாத்திரவான்களாய் வாழ நாம் எங்களை அர்ப்பணிப்போமாக.
எபேசி 4:1 ம் வசனத்திலே பவுல் அப்போஸ்தலன் சிறையிலே ஒரு கைதியாய் இருக்கும் போது, ஏறக்குறைய புதிய ஏற்பாட்டிலே 14 நிரூபங்களை  எழுதினான். அதில் ஒன்று தான் இந்த எபேசியருக்கு எழுதின நிரூபம். அதிலே அவன் சொல்லுகிறான், வச1 ”ஆதலால் கர்த்தர் நிமித்தம் கட்டுண்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தி என்னவெனில் நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பிற்கு பாத்திரவான்களாய் நடந்து கொள்ளுங்கள்”. அவன் சொல்வது என்னவென்றால், தேவன் என்னுடைய வாழ்க்கையிலே வைத்த அவருடைய அழைப்பின் நிமித்தம், நான் என்னுடைய சொந்தப் பட்டணத்தை விட்டு வெளியேறி கப்பல் மார்க்கமாக, தரை மார்க்கமாக தேசங்களுக்குள்ளே,  ஜாதிகளுக்குள்ளே கடந்து சென்று, தேவனுடைய சுவிஷேசத்தை அறிவிக்க என்னை நான் அர்ப்பணித்தேன். இதினிமித்தம் பல தடவை கப்பல் சேதங்கள், கள்வர்களால் உண்டான சேதங்கள், என் சொந்த ஜனத்தினால் உண்டான சேதங்கள், நெருக்கங்கள், பசி, குளிர், காவல், கள்வர்களால் எறியுண்டு மரிக்கப் போகிற தருவாயிலே காணப்பட்ட சந்தர்ப்பங்கள், அவமதிக்கப்பட்ட நேரங்கள், ஒரு கள்வனைப் போல சிறையிலே அடைக்கப்பட்ட நேரங்கள் இது எல்லாம் எதற்காக? தேவன் என்னுடைய வாழ்க்கையிலே அழைக்கப்பட்ட அழைப்பிற்கு பாத்திரவானாய் நடக்க என்னை அர்ப்பணித்ததினாலே நான் இவற்றை சகிக்க வேண்டியிருந்தது. அருமையான தேவ பிள்ளைகளே அந்தப் பவுல் தான் சொல்லுகிறான் உங்களுடைய வாழ்க்கையிலே தேவன் வைத்திருக்கிற இந்த அழைப்பிற்கு பாத்திரவான்களாய் மாத்திரம் நடந்து கொள்ள கவணமாயிருங்கள். 
எபேசியருக்கு அவர் எழுதும் போது, 4ம் அதிகாரத்திலே சொல்லுகிறான் ஆதலால், ஆகவே அவன் ஆதலால் என்றால் எதினால் என்கிற ஒரு கேள்வியை நாம் எழுப்ப வேண்டும். எதினால் என்கிற கேள்விக்குப் பதில் முதல் மூன்று அதிகாரத்திலே அவன் எழுதியிருக்கிறார். ஏன் நாம் கர்த்தர் எங்கள் வாழ்க்கையிலே வைத்திருக்கிற அழைப்பிற்கு பாத்திரவான்களாய் நடக்க வேண்டும் என்றால்,
எபேசியர் 1:4 ம் உலகத் தோற்றத்திற்கு முன்பதாக தேவன் உன்னைத் தமக்கென்று தெரிந்து கொண்டதினாலே அந்த அழைப்பிற்குப் பாத்திரவானாய் நீ நடந்து கொள். இந்த உலகத்திலே எத்தனையோ விதமான ஞானிகள் எத்தனையோ மேதைகள், எத்தனையோ செல்வந்தர்கள் இருந்த போதிலும் தேவன் அவர்களை எல்லாம் கடந்து, அவர் உன்னையும் என்னையும் சந்தித்து இருக்கிறார். அதினால், அவருடைய அழைப்பிற்கு பாத்திரமாய் நடங்குகொள்ளுங்ள் என்கிறார்.
எபேசியர்:1:3ஆவிக்குரிய சகல ஆசிர்வாதங்களினாலும் அவர் நம்மை ஆசிர்வதித்திருக்கிறதினால். அல்லேலூயா! இந்த உலகத்தார் பெற முடியாத பெரிய வரப்பிரசாதமாகிய பரலோகத்தின் ஆசிர்வாதங்களினால் தேவன் உங்களை ஆசிர்வதித்திருக்கிறார். இன்றைக்கு அவருடைய பிரசன்னத்தை உங்களால் உணர முடிகிறது. ஆண்டவர் உங்களோடு பேசும் போது அதை நீங்கள் உணா்ந்து கொள்கிறீர்கள். கர்த்தருடைய வழிநடத்தலை நீங்கள் அறிந்து கொள்கின்ற நிலையிலே இருக்கிறீர்கள். அன்றாட தேவைகளை கர்த்தர் அற்புதமாக சந்தித்து வருகிறார். இதுதான் பரலோக ஆசிர்வாதம். ஆவிக்குரிய வரங்களினால் அவர் உங்களை அலங்கரித்திருக்கிறார். ஆவிக்குரிய கனியினால் அவர் உங்களை அலங்கரித்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு அழைப்பை உங்கள் வாழ்க்கையிலே அவர் வைத்திருக்கிறார். ஆகவே தான் பாத்திரவானாய் நீ நடந்துகொள்ளுங்கள் என்று அவன் சொல்லுகிறான். 
எபேசியர் 1:5,11-12 ஒரு காலத்திலே கோபாக்கினையின் பிள்ளைகளாய் இருந்த எங்களை பிதா இன்று அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவுக்கூடாக  மீட்டுக்கொண்டதினாலேயும்.ஒருநாள் இயேசுவைப் போல மாறவும் இயேசுவோடு கூட வாழவும் அவர் நம்மை அழைத்திருக்கிறார் என்று சொல்லுகிறார். அல்லேலூயா ! இந்த பூமி நமக்கு சொந்தமானதல்ல. இந்த பூமியிலே வேதனை, துன்பம், கவலை, கஷ்டம், போராட்டம், புறக்கனிப்பு இவைகள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக உங்கள் வாழ்க்கையிலே வந்து கொண்டே இருக்கும். ஆனால் சீக்கிரமாய் நாம் தேவனோடு கூட சேர்ந்து கொள்ளப் போகிறோம். அல்லேலூயா! அந்த இரகசிய வருகையின் நாள் சீக்கிரமாய் நடக்கப் போகிறது. வேதம் சொல்லுகிறது. கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருக்க பின்பு உயிரோடு இருக்கிற நாம் அவரோடு கூட எடுத்துக் கொள்ளப்பட்டு அப்படியே நாம் சதாகாலமும் அவருடைய நித்திய ஜீவனுக்குள்ளே பிரவேசித்து கவலையில்லாத, வேதனையில்லாத, கண்ணீரில்லாத, பசியில்லாத, வியாதியில்லாத, சமாதானம் நிறைந்த தேவனுடைய பிரசன்னத்திலே வாழ்கின்ற பாக்கியத்தைப் நாம் பெறப்போகிறோம். அல்லேலூயா ! அதினாலே கர்த்தர் உன்னை அழைத்த அழைப்பிற்குப் பாத்திரவானாய் நடந்துகொள் என்று பவுல் அப்போஸ்தலன் சொல்லுகிறான். 
எபேசியர் 1:6 என்னையும், உன்னையும் தம்முடைய பிள்ளையாக ஏற்றுக் கொண்டபடியினால். வேதம் சொல்லுகிறது நாம் யாவரும பாவம் செய்து தேவனுடைய மகிமையை இழந்தோம். தேவனுக்குப் பகைஞனாய் காணப்பட்டோம். ஆனால் தேவன் எங்கள் மேலே அன்பு கூர்ந்து, தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை இந்த பூமியிலே அனுப்பி, எங்கள் பாவங்களை அவர் மேலே சுமரபண்ணி, அவருடைய இரத்தத்தால் எங்களைக் கழுவி, பரிசுத்தமாக்கி, இன்று அவருடைய பிள்ளைகளாய் மாற்றி, என்னையும் உன்னையும் அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அதினால் அந்த அழைப்பிற்குப் பாத்திரவானா் நீ நடந்து கொள்ள வேண்டும். 
எபேசியர்1:7இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினால் நீ கழுவப்பட்டு நீதிமானாக்கப்பட்டிருக்கிறாய். இந்த உலகத்திலே இருக்கிற ஜனங்கள் பெறாத ஒரு வரப்பிரசாதம் தான், தேவனுக்கு முன்பாக நிற்கக்கூடி பாக்கியத்தைப் பெறுவது. நீதிமான்களாய்க் கர்த்தர் உன்னை மாற்றியிருக்கிறார். ஆகவே அந்த அழைப்பிற்குப் பாத்திரவானாய் இருக்க வேண்டும்.
எபேசி 2:1-4 நரகத்தை நோக்கிப் போய்கொண்டிருந்த எங்களை, பாதாளத்திலே வாழ வேண்டிய எங்களை, அவர் கரம் தூக்கி மீட்டபடியினால்! இனிமேல் உனக்கு நரகமில்லை, என்னோடு பரலோக வாசியாய் மாறுகிறாய் என்று சொன்னதினால், அந்த தெய்வத்திற்குப் பாத்திரவான்களாய் நாம் வாழ வேண்டும். 
எபேசி2:4கர்த்தர் எங்கள் மீது அன்பு கூர்ந்ததினால், அவர் நம்மை நேசிக்கிறதினால், அந்த அழைப்பிற்குப் பாத்திரவான்களாய் வாழுங்கள். 
எபேசி2:5 தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை இந்த பூமிக்கு அனுப்பி, இயேசு சுவாமி தம்முடைய ஜீவனை உனக்காகவும், எனக்காகவும் கல்வாரி சிலுவையிலே ஊற்றினார். அதற்காக நாம் அவருடைய அழைப்பிற்குப் பாத்திரவான்களாய் மாற வேண்டும் என்று பவுல் சொல்லுகிறான். 
எபேசி2:6,7எங்களுக்கு ஒரு எதிர்காலத்தை ஆண்டவர் ஏற்படுத்தி விட்டார். அல்லேலூயா! ஒரு தேவனுடைய பிள்ளை இந்த உலகத்திலே மரிக்கும் போது வேதம் சொல்கிறது அவன் நம்பிக்கையோடே மரித்துப் போகிறான். ஏன் இந்தப் பூமியிலே நாங்கள் கண்களை மூட, எங்களுடைய ஜீவன் போக அடுத்த நிமிடம் நாங்கள் தேவனோடு கூட வாழ்கிறவர்கள். அதுதான் எங்களுடைய பரம வீடு. நாங்கள் நிர்வாணியாய் இநதப் பூமியிலே வந்தோம். வேதம் சொல்லுகிறது நிர்வாணியாய் இந்த பூமியிலே இருந்து கடந்து செல்லப் போகிறோம். பூமியிலே இருந்து நாங்கள் ஒன்றையும் கொண்டு போகப் போகிறது கிடையாது. ஆனால் கர்த்தர் உனக்காக ஒரு ஸ்தலத்தை  ஆயத்தப்படுத்தப் போயிருக்கிறபடியினால் அந்த அழைப்பிற்குப் பாத்திரவானாய் நீ வாழ வேண்டும். 
எபேசி2:8,9 அவர் உன்னை இரட்சித்தபடியினால். உன்னுடைய கிரியையினாலே நீ இரட்சிக்கப்படவில்லை. தேவன் உன் மேலே அன்பு கூர்ந்து, உனக்கொரு ஈவாக இரட்சிப்பைக் கொடுத்தாரே. அதினாலே நீ அழைக்கப்பட்ட அழைப்பிற்குப் பாத்திரவானாய் நடந்துகொள்ள வேண்டும்.
எபேசி2:10 தேவன் உனக்கொரு புதிய வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறார். பழையவைகள் எல்லாம் ஒழிந்து போயிற்று, எல்லாமே புதிதாயின. ஆகவே இந்தப் பதிய வாழ்க்கையை ஆண்டவர் உனக்குக் கொடுத்தார். முன்னே ஒரு பெரிய பாவியாய் நீ இருந்திருக்கலாம், ஆனால் இப்போழுதோ ஆண்டவர் உன் பாவங்களையெல்லாம் கழுவி, பரிசுத்தமாக்கியிருக்கிறார். புதிய வாழ்க்கையை கொடுத்திருக்கிறார். முன்னே நீ தவறியிருக்கலாம்! நீ விழுந்து போயிருக்கலாம் நீ இடறியிருக்கலாம்!அவையெல்லாம் பழயவையாகி விட்டது. உனக்கொரு புதிய வாழ்க்கையை வைத்திருக்கிறார். அதினாலே அந்த அழைப்பிற்குப் பாத்திரவான்களாய் நடந்துகொள்ள வேண்டும். 
எபேசி2:11-18அந்நியர்களையும்,  யூதர்களையும் தேவன் இரட்சித்தார். அதினாலே அந்த அழைப்பிற்குப் பாத்திரவான்களாய் காணப்பட வேண்டும்.
எபேசி3:1-21தேவன் எங்களை ஆசிர்வதிக்க அவர் சித்தம் கொண்டிருக்கிறபடியால், தேவன் என்னோடு கூட இருந்து, என்னோடே பேசி பரலோகக் காரியங்களை எனக்குக் கற்றுக்கொடுக்க அவர் சித்தமாய் இருக்கிறார். அதேபோல உன்னை உயர்த்த, உன்னுடைய உள்ளத்தின் வாஞ்சைகளைத் தீர்க்க, அவர் வாஞ்சையோடு இருக்கிறபடியினால், அவன் சொல்லுகிறான். கர்த்தர் உன் வாழ்க்கையிலே வைத்திருக்கிற இந்த அழைப்பிற்குப் பாத்திரவானாய் இரு. 
பிலிப்பியர்:1:27 ம் வசனத்திலே பவுல் அப்போஸ்தலன் சொல்லுகிறான் ”எவ்விதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் சுவிஷேசத்திற்கு பாத்திரராக மாத்திரம் நடந்து கொள்ளுங்கள்”. உங்களுடைய வாழ்க்கை மற்றவர்கள் கிறிஸ்துவை அறிகிற வாழ்க்கையாய்க் காணப்பட வேண்டும். நீங்கள் வேலை செய்கிற இடத்திலே, நீங்கள் படிக்கிற பாடசாலையிலே, உங்கள் சமூதாயத்திலே, அந்நியர்கள் உங்களுடைய வாழ்க்கையைப் பார்த்து, அந்த நற்சுவிஷேசத்தை பெற்றுக் கொள்ளக்கடவர்கள். அதற்காக நீ பாத்திரவானாய் வாழ வேண்டும் என்று பவுல் அப்போஸ்தலன் சொல்லுகிறான். 
2கொரி5:17 ''இப்படியிருக்க ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புதிய சிருஷ்டியாய் இருக்கிறான். பழையவையெல்லாம் ஒழிந்து போயின. எல்லாம் புதிதாயிற்று”. பழையவைகளை விடு, தேவன் உன்னுடைய வாழ்க்கையிலே ஒரு புதிய அத்தியாயத்தை திறந்து கொடுத்திருக்கிறார். தேவன் உன்னை ஒரு புதிய மனிதனாய் மாற்றியிருக்கிறார். ஆகவே அந்த அழைப்புக்கு  பாதத்திரவானாய் காணப்படு. 
1பேதுரு1:16 ”நான் பரிசுத்தர் ஆகையால் நீங்களும் பரிசுத்தராய் இருங்கள் என்று எழுதியிருக்கிறதே”. நான் சேவிக்கிற தெய்வம் பரிசுத்தமான தெய்வம் என்ற படியினால் நாம் பரிசுத்தமுள்ளவர்களாய் வாழ்ந்து எங்கள் அழைப்பிற்குப் பாத்தரவான்களாய் நடந்து கொள்ள வேண்டும். 
1யோவான்2:6 அவருக்குள் நிலைத்திருக்கிறேன் என்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே, அதாவது இயேசு நடந்தபடியே, தானும் நடக்க வேண்டும். அதுதான் சபைக்குள்ளே ஒரு வாழ்க்கை சபைக்கு வெளியே ஒரு வாழ்க்கை வாழ முடியாது. நாம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டோமா? அதன் பின்பதாக 365 நாட்களும் அந்த அழைப்பிற்குப் பாத்திரவான்களாய் வாழ நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். 
எபிரேயர்11:32-38 வசனம் வரை பார்த்தீாகள் என்றால் கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, ஆபிரகாம், ஆபேல், மோசே, ராகாப் இவர்களைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. 38ம் வசனத்தில் பாருங்கள் ”உலகம் அவர்களுக்கு பாத்திரமாய் இருக்கவில்லை” என்று வேதம் சொல்லுகிறது. ஏன் இருக்கவில்லை? அவர்கள் உலகத்திற்காக வாழவில்லை. உலகத்திற்காக தங்கள் வாழ்நாட்களைச் செலவழிக்கவில்லை. அவர்கள் உலகத்திலே வாழ்ந்த காலங்களிலே தேவனுக்காக வாழ்ந்தார்கள். நோவா தேவனுக்காக வாழ்ந்தான். ஏனோக்கு தேவனுக்காக வாழ்ந்தான். இன்று அதே தேவன் உன்னைப் பார்த்து உன்னை நான் தெரிந்திருக்கிறேன். உனக்காக என்னுடைய ஜீவனையே கொடுத்தேன். இந்த 2013ம் ஆண்டிலே உன்னுடைய வாழ்க்கையிலே வைத்திருக்கிற நான் வைத்திருக்கிற அந்த அழைப்பிற்கு பாத்திரவானாய் நீ நடந்துகொள். அல்லேலூயா! 
பாத்திரவான்களாய் நாம் நடந்து கொள்ளுவோம். உங்கள் ஒவ்வொருவரையும் தேவன் ஒரு ஊழியக்காரனாக, ஒரு ஊழியக்காரியாக தேவன் அழைத்திருக்கிறார். சின்ன பிள்ளையாய் இருந்தாலும் பரவாயி்ல்லை, வயது முதிர்ந்தவராய் இருந்தாலும் பரவாயில்லை, ஒன்றை மாத்திரம் விளங்கிக் கொள்ளுங்கள்! தேவ ஊழியம் செய்ய கர்த்தர் உன்னை தெரிந்த கொண்டார். எல்லாரும் ஒருவிசை சொல்லுங்கள்! ”நான் அழைக்கப்பட்ட அழைப்பிற்குப் பாத்திரவானாய் நடந்து கொள்ள என்னை அர்ப்பணிக்கிறேன்”. அல்லேலூயா ! 
ஆகவே நாம் தேவன் அழைத்த அழைப்பிற்குப் பாத்திரவானாய் நடந்து கொள்ளுவோம். அல்லேலூயா ! ஆமென்.

No comments:

Post a Comment